சகல தோஷங்களும் தீரவேண்டுமா..? பழைமையான கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வாங்க.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.


கதிர் என்றால் ஒளி என்று பொருள். இருளில் தத்தளிக்கும் பக்தர்களை மீட்டெடுக்கும் வகையில், ஒளி பொருந்திய பெருமாளாக அவர் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

பழமையை பறைசாற்றும் இந்தக் கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோவிலுக்கு உள்ளேயே, கருவறையை சுற்றி வருவதற்கு இடம் உள்ளது. அதற்கான நுழைவு வாயிலில் குனிந்தபடி உள்ளே சென்று, நிமிர்ந்தபடி வலம் வந்து மீண்டும் குனிந்து கொண்டே வெளியேறும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக்கலை நாயக்கர் காலத்தை குறிப்பிடுவதாக உள்ளது.

கோவில் கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார்–லட்சுமியுடன் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். அவர்களின் முன்பு சுயம்புலிங்கம் உள்ளது. சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி அளிக்கின்றனர். அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள் பிரகார அமைப்புடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

பண்டைக்காலத்தில் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில், காலப்போக்கில் கன்னிவாடி ஜமீன்தார்களால் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த கோவிலை, 1964–ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாதசுவாமி கோவிலின் உபகோவிலாகவும் இது விளங்குகிறது.

இங்கு வந்து, கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோவிலின் முன்புறத்தில், பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளது. உள்ளே சென்றவுடன் வலதுபுறத்தில் அனுக்கிரக பைரவர், இடதுபுறம் வீரமகா ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக கருடாழ்வார் சன்னிதி, மணிமண்டபம், அதன் உள்ளே முன்பக்கத்தில் 2 துவாரக பாலகர்கள் உள்ளனர்.

இதேபோல் வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவர் தான், சரஸ்வதியின் குரு. இவரை வழிபட்டால், கல்வி, செல்வம் பெருகும். ஆவணி திருவோண நாளில், ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏலக்காய் மாலை சாற்றி இவரை வழிபடுகின்றனர்.

ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும். கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

கதிர்நரசிங்க பெருமாள் கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது நெய் தீபம் ஏற்றுவது தான். எண்ணெய் ஊற்றி இங்கு தீபம் ஏற்றுவதில்லை. திருமண தடை நீங்கவும், கணவர் நலம் பெற வேண்டியும், மன அழுத்தம் குறையவும் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நரசிம்மன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, புரட்டாசி 3–வது சனிக்கிழமை பூஜை, பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை கோவிலின் முக்கிய விழாக்கள் ஆகும். சித்திரைத்திருநாள்

புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம், 2–வது வாரம் வெண்ணை காப்பு, 3–வது வாரத்தில் பெருமாள்–ஏகாந்த சேவை, ஆஞ்சநேயர்–காய்கறி அலங்காரம், பெருமாள், செங்கமலவல்லி தாயார்–திருக்கல்யாண உற்சவம், 4–வது வாரம் ஆஞ்நேயர்–பெருமாளுக்கு பழ அலங்காரம், 5–வது வாரத்தில் ஆஞ்சநேயர், பெருமாள்–புஷ்ப அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.

இதேபோல் கார்த்திகை மாதத்தில் தீபவழிபாடு, மார்கழி முதல் தனூர்மாத பூஜை, அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி, ஆஞ்சநேயர் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபதவாசல் திறப்பு, பெருமாள் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது.

அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்ச நேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது. என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். தொழில் விருத்தியாகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.