திருவிளையாடல் புராணம் – பலகையிட்ட படலம் – பாணபத்திரரின் பக்தி

பாணபத்திரர் மூன்று வேளையும் தவறாது சோமசுந்தரக் கடவுளுக்கு இசை பாடி வந்தார். இவரது இசைபாடும் பக்தி நள்ளிரவிலும் நடைபெற்றது.


இறைவனார் பாணபத்திரரின் இசைசேவையை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பினார். ஒருநாள், பாணபத்திரர் கோயிலுக்கு புறப்பட்ட போது கடும் மழை, இடி, மின்னல் என இருந்தது. யாழை ஒரு துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு, எப்படியாவது கோயிலுக்கு போய் விட வேண்டுமெனக் கருதிய பாணபத்திரர் கொட்டும் மழையில் நடந்து கொண்டிருந்தார். யாழை துணியில் சுற்றி வைத்திருந்தாலும் கூட, பலத்த மழையில் அது நனைந்ததைத் தடுக்க அவரால் முடியவில்லை. எங்கும் சேறு வேறு. குளிரில் உடல் நடுங்க கோயில் வந்து சேர்ந்தார்.

வழக்கம் போல யாழை எடுத்து மீட்ட ஆரம்பித்தார். கைகள் நடுங்கியதாலும், மழையில் யாழ் நனைந்து போனதாலும் இசை ஒழுங்காக வரவில்லை. அபஸ்வரம் போலத் தெரிந்தது. இதற்குள் வெளியே பெய்த மழை நீர் கோயிலுக்குள் புகுந்து பாணபத்திரர் நின்ற மண்டபத்தைச் சூழ்ந்தது. தண்ணீருக்குள் நின்றபடி பாணபத்திரர் கடும் முயற்சி செய்து யாழை மீட்டியபடியே இறைவனை புகழ்ந்து பாட ஆரம்பித்தார். கடும் முயற்சி இருந்தால், எந்தச் சூழலிலும் நமது பணியைத் திறம்படச் செய்யலாம் என்பதற்கு பாணபத்திரரின் முயற்சியே உதாரணம். அங்கு ஏற்கனவே வந்து நின்ற பக்தர்கள் பாணபத்திரரின் இந்தச் செய்கையைப்பாராட்டியதுடன், அர்த்தஜாம பூஜை வேளையில் தங்களை மழை வெள்ளத்துடன் இசை வெள்ளத்திலும் நீந்த வைத்ததற்காக அவருக்கும், இறைவனுக்கும் நன்றி கூறினர்.

அப்போது பாணபத்திரரின் காதுகளில் ஒரு ஒலி கேட்டது. பாணபத்திரா! எந்தச் சூழலிலும் தளராத உனது பக்தியின் பெருமையை உலகோர் உணரவே இந்த திருவிளையாடலைப் புரிந்தேன். நீ திடமானவன், வைராக்கியமானவன்.இதோ! இங்கு நிற்போர் அனைவரும் அதிசயப்படும் வகையில் தங்கத்தால் ஆன பலகை ஒன்றை உன் முன் தோன்றும்படி செய்கிறேன். நீ தினமும் அதன்மீது நின்று யாழிசைக்கலாம், என்றது. சொன்ன மறுகணமே வானில் இருந்து ஒரு தங்கப்பலகை கோயில் மண்டபத்துக்குள் புகுந்து, பாணபத்திரர் முன்னால் வந்தது. ஊரார் அதிசயித்தனர். சோமசுந்தரரின் கருணையே கருணை என்று வாழ்த்தினர்.

பாணபத்திரர் அதன் மீது ஏறி நின்று இனிய கீதம் இசைத்தார். பூஜை முடிந்ததும், தனக்கு இறைவன் தந்த தங்கப்பலகையை தலையில் ஏந்தி வீடு சென்றார் பாணபத்திரர். இந்தத் தகவல் மன்னன் வரகுணபாண்டியனின் கவனத்திற்கு வரவே, மறுநாள் காலையில் பாணபத்திரரின் வீட்டுக்கு பல்லக்கை அனுப்பி, அவரை அதில் ஏற்றி வரச்செய்தான். பாணபத்திரர் இறைவனால் தனக்கு அருளப்பட்ட தங்கப்பலகையுடன் அவைக்கு வந்தார். அந்தப் பலகை மீது பட்டு விரித்து அதன் மேல் பாணபத்திரரை அமரச் செய்தான் மன்னன். அவரைப் பாராட்டிப் பேசினான். மதுரையின் நாயகன் என பட்டம் கொடுத்தான். பாணபத்திரருக்கும், திருக்கோவிலுக்கும் பல பொருட்களை பரிசாகக் கொடுத்தான். அந்நாள் முதல் பாணபத்திரர் திருகோவிலுக்குச் சென்று நான்கு காலங்களிலும் பாடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். இவ்வாறு பாணபத்திரருக்கு அருள் செய்தார் சுந்தரேசர்.

எத்தகைய கடும் சூழலிலும் விடாமுயற்சி செய்து செயல்களை நேர்த்தியாக செய்பவர்கள் அதற்கான பலனை கட்டாயம் பெறுவார்கள் என்பதே பலகை இட்ட படலம் கூறும் கருத்தாகும்