திருவிளையாடல்_புராணம் - இரசவாதம் செய்த படலம் – இறைவனுக்கு பொற்சிலை வடித்த நாட்டியப்பெண்மணி

மதுரை அருகில் திருப்பூவனம் என்ற ஊரில் (இப்போதைய பெயர் திருப்புவனம்) இங்குள்ள பூவனநாதர் கோயிலில் கணிகையர் எனப்படும் ஆடல்குலப் பெண்கள் சிவபெருமானை மகிழ்விக்கும் வகையில் நாட்டியாஞ்சலி நடத்தி வந்தனர்.


இவர்களில் ஒருத்தி பொன்னனையாள். கற்புக்கரசியான இந்தப் பெண்மணி தினமும் காலையில் தன் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களை எழுப்பிக்கொண்டு, வைகையில் சென்று நீராடுவாள். பூவனநாதரை வணங்கி, நாட்டியமாடுவாள். பின்னர், தன் இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள சிவனடியார்களுக்கு உணவு பரிமாறுவாள். அதன் பிறகே சாப்பிடுவாள். இப்படி தினமும் விரதம் அனுஷ்டித்த பெண் அவள்.

இந்தப் பெண்ணின் புகழை பாரோர் அறிய திருவுளம் கொண்டார் பரம்பொருளான பூவனநாதர். அவள் நடராஜர் சன்னதி முன்பே நாட்டியமாடுவாள். அப்போது அந்தச் சிலையை உற்றுப்பார்ப்பாள். என் இறைவா! பக்தர்கள் உன்னைப் பொன்னே, பொருளே என போற்றி மகிழ்கிறார்கள். அந்தப் பொன்னாலேயே உனக்கு சிலை செய்தால் என்ன? என்று வேண்டினாள். தங்கத்தில் சிலை செய்ய வேண்டுமானால், பெரும் பொருள் வேண்டுமே! இதைத் திரட்டும் சக்தியைத் தனக்கு தர வேண்டுமென அவள் பிரார்த்தித்தாள். பலநாளாக உருகி உருகி வைத்த இந்தக் கோரிக்கையை ஏற்க இறைவனும் முடிவு செய்துவிட்டார். ஜடாமுடி தரித்து, கமண்டலம், ஜபமாலையுடன் பொன்னனையாளின் வீட்டுக்கு ஒரு துறவி போல் எழுந்தருளினார்.

அங்கே சில அடியவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர் அவளது வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தார். பொன்னனையாள் இல்ல சேவகியர், துறவியை இல்லத்துக்குள் வந்து உணவருந்துமாறு வேண்டினர். அவரோ, உங்கள் எஜமானியை வரச்சொல்லுங்கள், என்றார். ஆகட்டும், என்ற அவர்கள் பொன்னனையாளை அழைக்க உள்ளே சென்றனர். தோழிகள் உள்ளே சென்று பொன்னனையாளை அழைத்து வந்தனர். துறவியை வணங்கி எழுந்த அவளிடம், பெண்ணே! உன் மனதில் ஏதோ குறை ஒன்றுள்ளதை இங்கு நுழைந்தவுடனேயே தெரிந்து கொண்டேன். உன் குறையை தீர்த்தபின் நீ சிவனடியார்களுக்கு வழங்கும் அன்னத்தை ஏற்பதே முறையானது. குறையைச் சொல், என்றார். சுவாமி! நடராஜப்பெருமானுக்கு தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் இருக்கிறது.

ஆனால், அதற்கு எவ்வளவோ செல்வம் வேண்டுமே! அதனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். இதைத்தவிர வேறு எந்த குறையுமில்லை, என்றாள் பொன்னனையாள். மகளே! இதற்கா கவலைப்படுகிறாய். உன் வீட்டிலுள்ள செம்பு, வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயப் பாத்திரங்களையெல்லாம் எடுத்து வா. அவற்றை பொன்னாக மாற்றித்தருகிறேன். அவற்றை உருக்கி நீ சிலை செய்யலாம், என்றார். பொன்னனையாள் இதை நம்புவதா, இல்லையா என்ற குழப்பத்திற்கு ஆளானாள். இருப்பினும் அவர் சொன்னதைச் செய்தாள். அவர் அவற்றில் திருநீறு பூசி, இவற்றை இன்று இரவு முழுவதும் நெருப்பில் வைத்துவிடு, என்றார். உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். சுவாமி! தங்கத்தில் சிலை வடித்ததும் தாங்களும் அதனைக் காண வேண்டாமா? இங்கே சில நாட்கள் தங்குங்களேன், என்றாள்.

பெண்ணே! நான் மதுரையில் தான் வசிக்கிறேன். என்னை சித்தன் என்பார்கள். நீ பணிகளை முடி. பிறகு, எப்போது நினைக்கிறாயோ அப்போது வருவேன்,என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பொன்னனையாள் அவர் சொன்னது போலவே பாத்திரங்களை தீயில் இட்டாள். மறுநாள் அவை பொன்னாக மாறியிருந்தது கண்டு அதிசயப்பட்டாள். வந்தது சாதாரண துறவியல்ல, அந்த ஈசனால் தான் இது முடியும் என பரவசப்பட்டாள். பூவனநாதர் கோயிலில் இருந்த நடராஜரைப் போலவே பொன்னில் சிலை வடித்தாள். துறவியை மனதால் நினைத்தாள். அவரும் அங்கு வந்து சேர்ந்தார். பொற்சிலையை தேரில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து பூவனநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்தாள். துறவியை சிவனாகவே போற்றி வணங்கினாள். பலகாலம் பொற்சிலையை வணங்கி இறைவனின் திருவடியை அடைந்தாள்.