குழந்தை பாக்கியம் தரும் வடை ஒன்னு ரூ.100! எங்கனு தெரியுமா?

குழந்தை இல்லாத பெண்கள் வடை ஒன்றை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.


 "குழந்தை இல்லையா? சாமி வடை சாப்பிடுங்க." திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள முருகன் கோவிலில் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்து சொல்லப்படும் வழிமுறை இது. 


   இங்கு உள்ள முருகன் கோவிலில் கடந்த 10 நாட்களாக தைப்பூச திருவிழா நடைபெற்று வந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாக்கில் அலகு குத்துவது, முதுகு மற்றும் கால்களில் அலகு குத்தி கயிறு மூலம் அந்தரத்தில் தொங்குவது போன்ற நேர்த்திக் கடன்களை மேற்கொள்கின்றனர்.


  அந்த வரிசையில் ஒன்றுதான் கொதிக்கும் எண்ணெயில் வெந்துகொண்டிருக்கும் வடைகளை வெறும் கைகளால் எடுக்கும் நேர்த்திக் கடன். கோவிலுக்கு வெளியே அடுப்பில் வைக்கப்பட்டுள்ள சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கும்.

   

   மேலும் அந்த எண்ணெயில் வடை போடப்பட்டு இருக்கும். இந்த வடைகளை பக்தர்கள் தங்கள் வெறும் கைகளால் எடுப்பது வழக்கம். அதாவது கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிட்டு அந்த வடையை  எடுக்க வேண்டும்.

 

   இவ்வாறு எடுக்கப்படும் வடையை சாப்பிட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் எடுக்கும் வடைகள் கோவில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும்.


    இந்த வடைகளை சாமி வடை என்று கூறி பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் வடைகளை வாங்க கடும் போட்டி நிலவும். இதற்காகவே திருவண்ணாமலை செங்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படை எடுக்கிறார்கள்.


  இந்த வடையை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் எனவும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவி வருகிறது. 


   ஒரு வடையின் விலை அதிகமெல்லாம் இல்லை. 100 ரூபாய் மட்டுமே ! 100 ரூபாய் கொடுத்து இந்த வடையை ஏராளமானவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். மேலும் இந்த வடையை சாப்பிட்டு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினரும் ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு தவறாமல் வந்துவிடுகின்றனர்.