100 நாள் திட்டத்தில் ஒரு மாத ஊதிய முன்பணம் தரவேண்டும் - திருமாவளவன் யோசனை!

நாடு முழுவதும் ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு எடுக்க வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இந்தமுறையும் எந்த ஒரு வார்த்தையும் பேசாதது ஏமாற்றமளிக்கிறது;


 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பதிவுசெய்துகொண்டுள்ள அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை முன்பணமாக வழங்கவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

 ” இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருபத்தொரு நாட்களுக்கான ஊரடங்கு நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. கொரொனா தொற்றின் சமூகப் பரவலைத் தடுப்பதற்கு இது இன்றியமையாதது.” என வி.சி.க. வரவேற்றதை நினைவூட்டிய அவர், 

” ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 21 நாட்களில் நாட்டு மக்களுடைய நலன் கருதி மத்திய அரசு அறிவிக்க வேண்டிய பொருளாதார நிவாரண நடவடிக்கைகளைப் பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  

மேலும், “ ஜிஎஸ்டி, வரி வருமான வரி உள்ளிட்ட மத்திய அரசின் வரி வசூலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றமும், அலகாபாத் உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்தன. அந்த தீர்ப்புகளுக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறது. இந்த நேரத்திலாவது அந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். 

இந்த முழு அடைப்பால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சிறு குறு தொழில்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் முதலானவற்றுக்கு நிவாரணத் தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை ஊழியர்களுக்கும், இவற்றின் ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிவாரணத் தொகையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதமர் கிசான் திட்டத்தை 10 ஆயிரமாக உயர்த்தி அதை குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் உடனடியாக ஒரு லட்ச ரூபாய் சுழல் நிதி வழங்க வேண்டும்.

அவசரத் தேவைகளுக்காக நகை கடன் பெறுவோருக்கு 4 சதவீத வட்டியில் நகை கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் சோதனை மையங்களை வட்டத்துக்கு ஒன்று என உருவாக்க வேண்டும்.

கொரொனா தொற்று பரிசோதனை செய்ய பெரிய தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் அனுமதிப்பதோடு அத்தகைய சோதனைகளுக்கும் அதன் பின்னரான சிகிச்சைக்கும் ஆகும் செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும். 

இப்பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்காகமாநில அரசுகளுக்கென வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்பதால் மேலும் கூடுதலான நிதியை உடனே மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி பாக்கித் தொகையை இப்போதாவது மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக சுமார் 8 இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, மக்களின் உயிரைக் காப்பதற்காக குறைந்தபட்சம் அதில் பாதித் தொகையையாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும். ”என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.