இசை பிரியர்கள் வணங்கவேண்டிய திருத்தலம்! சுகப்பிரசவமும் தரும் ஆடுதுறை திருக்கோயில்

மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆடுதுறை தலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.


காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது.

வெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம். உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேஸ்வரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.

தன்னை வழிபடுவோரின் சகல ஆபத்துகளையும் நீக்குவதால் இந்த தலத்தின் இறைவனுக்கு அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம். சுக்ரீவன் பூஜித்த இந்தத் தலத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சொர்ணபைரவர் அமைந்திருப்பது சிறப்பு. நாரதரால் சாபம் பெற்ற அனுமன் சாபவிமோசனம் பெற்ற தலம்.

இந்த ஊருக்கு நடராஜபுரம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. சித்திரை மாதம் 5 6 7 ஆகிய நாட்களில் சூரியனின் கதிர்கள் நேரடியாக இறைவனின் மீது விழும். அந்த நாட்களில் நடைபெறும் சூரிய பூஜையை தரிசித்து வழிபடும் அன்பர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அனுமனுக்கு இசைஞானம் அருளிய தலம் என்பதால் இசை பிரியர்கள் அனைவரும் வந்து வழிபட வேண்டிய தலமும் கூட. இங்கு வந்து ஈசனை மனதார வழிபட்டு வேண்டிக் கொண்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம்.

இவ்வாலய முருகப்பெருமான் சிறப்புக்குரியவர்்; அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும். ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை - மகன், இவ்வாலயம் வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால், வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.