குரு பெயர்ச்சி பலன்கள்..! எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

இயற்கை சுபரான குருபகவான் சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் நின்ற வீட்டின் காரகங்களையும், அவர் ஏற்ற ஆதியப்பத்திற்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தரவல்லவர். குருபகவான் சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் நின்ற வீட்டை காட்டிலும் அவர் பார்க்கும் வீட்டிற்கு அதிக சுப பலன்களை அளிக்கக்கூடியவர்.

குருபகவான் அனைவருக்கும் சுப பலன்களை அளித்தாலும் அவர் ஏற்ற ஆதியப்பத்தின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை அளிக்கக்கூடியவர். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் பார்வைக்கு எண்ணிலடங்கா சுப பலன்களை செய்யும் ஆற்றல் உண்டு. இக்காரணங்களால்தான் குருபகவான் 'குரு பார்க்க கோடி புண்ணியம்" என்றும், 'குரு பார்வை தோஷ நிவர்த்தி" என்றும் போற்றப்படுகிறார். குருபகவான் ஒரு ராசியில் சுப பாவகங்களை தனது பார்வையால் பார்க்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான் அசுப பாவகங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் சுப மற்றும் அசுப பலன்களை அளிப்பார்.

அசுப பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் குருபகவானால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க கீழ்கண்ட ராசிக்காரர்கள் சாந்தி செய்து கொள்வது நன்மையை அளிக்கும் :

ரிஷபம்

கடகம்

துலாம்

மகரம்

இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பாகும். குருப்பெயர்ச்சி நாளில் குருவிற்கு உண்டான பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

குருப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது திசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லவர்.