அரூப சிவபெருமான், அரூப அம்பிகை. ஞான ஒளி காட்டும் திருக்கோயில் இது!

திருப்பெருந்துறை தமிழ்நாட்டில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.


புதுக்கோட்டை பட்டுக்கோட்டை, காரைக்குடி, முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் திருப்பெருந்துறை என்று கூறப்பட்டிருக்கிறது. தற்பொழுது ஆவுடையார் கோவில் என்றே வழங்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதிகயிலாயம், குருந்தவனம், சிவபுரம், பராசந்திபுரம், பூலோக கயிலாயம் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந்துள்ள இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்திருக்கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூசிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது.

எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்க்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆன்மநாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங்குகிறார்.

சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். இவருக்கு முன் உள்ள படைகல்லில் புழுங்கலரிசி அன்னத்தை ஆவிபுலப்பட பரப்பி, அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலியன வைத்து நிவேதனம் செய்வர். உருவம் இல்லாதவர்க்கு உணவு ஆவியிலுள்ள நறுமணமே உணவாகும்.

அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவயோக நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.

இக்கோவிலின் தனிச்சிறப்புகள்

1. உருவம் இல்லாது அருவமாக விளங்கும் ஆத்மநாதர் அதே போன்று யோகாம்பிகை அம்மன்.

2. மாணிக்கவாசகர் சிவமாக திருவுருவம் கொண்டு விழாக்களை ஏற்றருளும் பாங்கு இவருக்கே எல்லா உற்சவமும் நடைபெறுகிறது.

3. இக்கோவிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டிகேஸ்வரர் கிடையாது. பரிவாரத் தேவதைகள் சந்நிதிகள் கிடையாது. இங்கு எல்லாமே ஞானமயம். யோக ஞான மார்கத்தார் பெரிதும் விரும்பும் தலம் ஆகும்.

4. இறைவனே குறுந்த மரமாக விளங்கி, இம்மரதினடியில் இறைவனே மனித ரூபம் கொண்டு எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் அருளி, இவ்விடத்தில் ஆலயம் அமைத்துப் பணிபுரிய கட்டளையிட்டது.

5. திருவிழாக்களில் திருச்சின்னம், சங்கு, மணி ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும். பிற வாத்தியங்கள் இங்கு உபயோகிப்பதில்லை.

6. நைவேத்தியம் செய்யும் போது, சுவாமி முன்னாலுள்ள பெரிய படை கல்லில் அன்னத்தைப் பரப்பி பட்சண வகைகளை உடன் வைத்து வில்வ தளங்கள் தூவி படைகல்லிற்கு வெளியில் இருந்து, அன்னப்புகைக்கு தீபாராதனை காட்டுகிறார்கள். உருவமில்லாத இறைவனுக்கு அன்னைத்தின் வாசனையே பிரதானம்.

இவ்வாறு பிற சிவன் கோவில்களிலிருந்து இத்தலம் பெரிதும் மாறுபட்டு விளங்குகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள வடக்கூர் ( வடநகர் ) என்ற ஊரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் முக்கியமானதாகும்.திருப்பெருந்துரையில் ஆத்மநாதரை அருவுருவமாக வழிப்பட்ட உருத்திரர்கள், தாங்கள் இறைவனை உருவத்தில் அர்ச்சித்து வழிப்பட விரும்பிய போது பெருமான் இங்கு சிவலிங்கமாக எழுந்தருளினார். அவரே ஆதி கயிலாய நாதர் ஆவார்.

அருவமாக விளங்கும் ஆன்மநாதரையும், அவரே உருத்திரர்களுக்கு உருவமாக காட்சி கொடுத்த வடக்கூர் ஆதி கயிலாயநாதரையும் நாம் வழிப்பட்டு வர, இறைவன் நமக்கு அருள் புரிவாராக என வேண்டுவோம் !