13ம் நம்பர் அதிர்ஷ்டம் இல்லாததா? 13ம் எண் பற்றிய அசத்தலான தகவல்கள்!

மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.


அந்த வகையில் 13 என்ற எண் அதிர்ஷ்டமற்ற எண் என்று சொல்வதில் எந்த வித உண்மையும் இல்லை. எண் கணிதம் என்ற கலை ஆங்கிலேயர்களின் மூலமாக இந்தியாவுக்குள் வந்தது. நியூமராலஜி என்பது வேறு; எண்கள் பற்றிய இந்தக் கணிப்புகள் என்பது வேறு. இவை அனைத்தும் அவரவர் கண்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதி வைக்கப்பட்ட கருத்துக்கள்.

ஏசுநாதரின் கடைசி இரவு விருந்தில் பங்கேற்றவர்கள் 13 நபர்கள் என்பதாலும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸ் 13 ஆவது நபராக அங்கே அமர்ந்திருந்ததாலும் அந்த எண்ணை அதிர்ஷ்டமற்ற எண்ணாகக் கருதத் தொடங்கினார்கள். வெள்ளிக்கிழமை 13ம் தேதி அன்று வந்தால் அது அபசகுணம் என்று சொல்லப்படுவதும் ஐரோப்பியர்களின் நம்பிக்கையே. ஐரோப்பியர்களில் கூட விதிவிலக்காக இத்தாலி நாட்டில் 13 என்ற எண் அதிர்ஷ்டம் நிறைந்ததாக கொண்டாடப்படுகிறது. அவர்கள் 17 என்ற எண்ணை அதிர்ஷ்டமற்றதாக ஒதுக்குவார்கள்.  

இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார். ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம் பெற நேரிட்டிருக்குமாம். 

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்களாம். 

மேலும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 13 ஆம் எண்ணை துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் 13 ஆம் தேதியன்று எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் தொடங்குவதில்லை. ஓட்டல்களில் 13 ஆம் எண் உள்ள அறைகள் இல்லை. விமானங் களில் 13 ஆம் எண் இருக்கை இருப்பதில்லை. மருத்துவ மனைகளில் 13 ஆம் எண் படுக்கை கிடையாது. அதோடு, வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அது தீய செயல்களைச் செய்யும் சாத்தானின் நாளாக கருதப்படுகிறது. 

இந்த எண்கள் பற்றிய கணிப்புகள் அனைத்தும் அவரவர் அனுபவத்தில் கண்டதே அன்றி ஜோதிடவியல் ரீதியாக இந்த கருத்துகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.அதே போல ஒரு வருடத்தில் 13 பௌர்ணமி அல்லது 13 அமாவாசை வந்தாலும் அந்த வருடம் அதிர்ஷ்டமற்ற வருடம் என்று சொல்லப்படுவது முற்றிலும் மூட நம்பிக்கையே. இந்த 13 என்ற எண் பேய் பயத்தினைத் தரும் என்று சொல்லப்படுவதற்கும் 8 என்ற என் கஷ்டத்தை தரும் என்று சொல்லப்படுவதற்கும் எந்த விதமான ஆதாரமும் கிடையாது.