அடேங்கப்பா, இத்தனை நரசிம்மர் அவதாரமா? எந்த நரசிம்மரை வணங்கினால் என்ன புண்ணியம்?

திருவுக்கும் திருவாகிய செல்வத்திருமால் எழுந்தருளிய அவதாரங்களில் ஏற்றமுடையதாகவும், எளிமையானதாகவும் விளங்குவது நரசிம்ம அவதாரம்.


மற்றைய அவதாரங்களில், குறிப்பாக ராம, கிருஷ்ண அவதாரங்களைக் காட்டிலும் ஏற்றம் உடையது ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஏனெனில் தன் பக்தனுக்காக எடுத்த அவதாரம் இது. நரசிம்மரின் அவதாரங்கள் எத்தனை, எந்த நரசிம்மரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1. ஜ்வாலா நரசிம்மர்: 10 கைகளுடன் தரிசனம் தரும் இந்த நரசிம்மர் இரணியனின் உடலைக் கிழிக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகள் ஆகியவற்றில் இருந்து காத்தருள்கிறார். சிறந்த தொழிலதிபர்களை உருவாக்குகிறார்.

2. அகோபில நரசிம்மர்: இரணியனை வதம் செய்த பின்பு கடுங்கோபமாக இருந்தவர், பின்னர் சாந்தம் அடைந்து தாயார் மகாலட்சுமியுடன் பிரகலாதனுக்கும், மற்றவர்களுக்கும் தரிசனம் அளித்தார். சுக்கிர தோஷத்தால் ஏற்படும் தோஷங்களை உடனடியாக போக்கி அருட்புரிவார்.

3. மாலோல நரசிம்மர்: சங்குசக்கரதாரியாய் அழகிய கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மனபயத்தைப் போக்கி தைரியத்தை அருள்கிறார்.

4. வராக நரசிம்மர்: சகல கலைகள், இயல், இசை, நாடகத்துறையில் சிறக்க அருள் புரிவார். நல்ல செழிப்பான இல்லங்களில் வாழும் பாக்கியம் அருள வல்லவர்.

5. காரஞ்ச நரசிம்மர்: ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருள்செய்து யாவரும் வணங்கி போற்றக்கூடிய ஞானிகள், மருத்துவ மேதைகளை உருவாக்க வல்லவர்.

6. பார்கவ நரசிம்மர்: பரசுராமர் இவரை வணங்கி சென்றதாக ஐதீகம் உண்டு. இவரை வழிபட்டால் பாவங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர அருள்புரிவார்.

 7. யோகானந்த நரசிம்மர்: பக்த பிரகலாதனுக்கு யோக பாடங்களை கற்றுக்கொடுத்தவர். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் தடைகளை தகர்ப்பார்.

8. சத்ரவட நரசிம்மர்: நாட்டின் தலைமை பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரத்தை வழங்க வல்லவர்.

9. பாவன நரசிம்மர்: மனம் போனபடி நடந்துகொள்வது, தீச்செயல்களை துணிந்து செய்வது போன்ற தீமைகளை தடுத்தாட்கொள்கிறார்.

10. பானக நரசிம்மர்: நாம் அளிக்கும் பானகத்தை பிரசாதமாக ஏற்றுக்கொண்டு நமக்கு மங்கள வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் அளிப்பவர்.