கொலுவுக்கு தாம்பூலம் கொடுக்கவும் வாங்கவும் இத்தனை சம்பிரதாயங்களா? அம்பிகையும் நேரில் வந்து தாம்பூலம் வாங்குவாள் தெரியுமா?

தாம்பூலம் கொடுக்கவும் வாங்கவும் சில விதிமுறைகள் இருக்கின்றன.


1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.

2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும்.

பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும்.

3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, அம்மன் முன் காட்டவும். தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.

5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.

6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால், அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.

7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.

8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர்.

புடவைத்தலைப்பால் முறத்தை மூடி, தாம்பூலம் வழங்குகின்றனர். பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார். அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்

தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து,வெற்றி பெறுவோம்!. இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.