காவேரி காப்பாளன் பட்டம் எடப்பாடியாருக்கு பொருத்தமானது... சட்டப்பேரவையில் கவர்னர் பாராட்டு.

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் முதல் நாளில் மாநில கவர்னர் சிறப்புரையாற்றுவது மரபு. அந்த வகையில், 2021ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றினார். அப்போது தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர், எடப்பாடியாருக்கு தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் திறன்மிகு தலைமையின் கீழ், இந்த அரசு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டை, நாட்டிலேயே தலை சிறந்த மாநிலம் ஆக்கும் இலக்கினை அடைவதில் இந்த அரசு வெற்றிநடை போடுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இந்தியாவிலேயே கோவிட் தொற்றை மிகச்சிறப்பாக கையாண்டது தமிழகம் என்று பாராட்டினார்.

மாநில அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்புச் சட்டத்தின் மூலம், மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான அரசு இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ததன் மூலம், சமூக நீதி மற்றும் சம நீதியில் ஒரு 

குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 435 மாணவர்கள் இந்த ஆண்டில் பயனடைந்துள்ளது மனமகிழ்ச்சி அளிக்கிறது. தொலைதூர கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப்பகுதிகளிலும் இலவச ஆரம்ப சுகாதார வசதிகளை அளிப்பதற்காக, 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்மாதிரி திட்டமாகப் பாராட்டப்படுகிறது. 

இந்திய அரசு வெளியிட்டுள்ள நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது. மேலும், ‘இந்தியா டுடே’ பத்திரிகை 2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ‘மாநிலங்களின் நிலை’ என்ற தலைப்பில், மேற்கொண்ட ஆய்வில், ‘ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலம்’ என்று தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் அவர்களையும், அவர் தலைமையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு அமைப்புகளையும் நான் வாழ்த்துகிறேன்.

‘பரிவுள்ள ஆளுமை’ என்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். ‘அம்மா திட்டம்’, ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘வட்ட இணையவழி மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு’ மற்றும் ‘அம்மா அழைப்பு மையம்’ உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே, முதலமைச்சரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும். 

ஊரடங்கிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக, மாநிலம் முழுவதும் அரிசி குடும்ப அட்டையைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், பெருந்தொற்று நோய், இரண்டு புயல்கள் மற்றும் ஜனவரி மாதத்தில் பருவம் மாறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக, அரிசி 

குடும்ப அட்டையுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2,500 ரூபாய் நிதியுதவியுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் வாயிலாக, காவேரி டெல்டா பகுதிகளிலுள்ள வேளாண் விளைநிலங்களும், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சட்டத்தின் மூலம், காவேரி டெல்டா பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியதால், அவருக்கு வழங்கப்பட்ட ‘காவேரி காப்பாளன்’ என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் ஆகிறார். 

தைப்பூசம் என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒரு முக்கியமான பண்டிகையாகும். மேலும், பல்வேறு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தைப்பூசம் பண்டிகை தினத்தை பொது விடுமுறையாக இந்த அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே சிறந்த நிருவாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது. பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றிநடை போடுகிறது என்று எடப்பாடியார் அரசுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார் கவர்னர்.