அம்மன் இல்லாத சிவ திருத்தலம்! இறைவனே பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிடும் திருத்தலம்!

இந்தியாவில் உள்ள 108 பிரதான சிவ தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் தலம் வைக்கம்


வைக்கம் என்றவுடன் கேரளாவில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் நடைபெறும் வைக்கத்தஷ்டமி விழாதான் நினைவுக்கு வரும். கார்திகை மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் மகாதேவாஷ்டமி என்ற பெயரில் நடக்கும் இத்திருவிழா.

அறங்களில் சிறந்தது அன்னதானம் என்ற நம்பிக்கையை கோடிட்டுக் காட்டுவது. வைக்கும் தலத்தில் அன்றைய அன்னதானத்தின் போது இறைவனே பக்தர்கள் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து உணவு உண்பதாக ஐதீகம் நிலவுகிறது.

சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான்.

ஆனால், அது முடியாமல் போனது. அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான். பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான்.

இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது. பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். இது கரன் என்ற அசுரனால் வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் மகாதேவர் தல வரலாறு குறித்து, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரிய அனைத்து நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இக்கோவிலில் அம்மன் இல்லை என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு நாட்கள் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் ஆலமரத்தோடு கூடிய மேடையை ‘வியாக்ரபாதர் மேடை’ என்று அழைக்கிறார்கள். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு, சிவபெருமான் இந்த இடத்தில்தான் காட்சி அளித்தார் என்றும், முனிவர் இறைவனிடம், தனக்குக் காட்சியளித்த நாளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.

இந்தக் கோவிலில் வியாக்ரபாதருக்கு இறைவன் காட்சியளித்த நாளான, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் ‘வைக்கத்தஷ்டமி’ என்ற விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இங்கிருக்கும் இறைவனை வழி படுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

வைக்கம் மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் வனதுர்க்கை சன்னிதி ஒன்று இருக்கிறது. இந்தச் சன்னிதிக்கு மேற்கூரை எதுவும் இல்லை. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வந்த போது, அரக்கி ஒருத்தி அவருக்கு இடையூறு செய்து கொண்டே இருந்தாளாம்.

அவள் ஒரு கந்தர்வ கன்னி என்பதும், அவள் ஒரு சாபத்தால் அரக்கியாக மாறியிருப்பதும் முனிவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து வியாக்ரபாதர் அவளுக்குச் சாபவிமோசனம் கிடைக்க, விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். விநாயகப் பெருமானோ, திரிசூலி தேவியை அனுப்பி அரக்கியை மூன்று துண்டுகளாக்கி சாப விமோசனம் அளிக்கச் செய்தார்.

அந்த அரக்கியின் உடல்பகுதி விழுந்த இடத்தில்தான் வனதுர்க்கை சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இங்குள்ள வனதுர்க்கையை வழிபட்டால், மனிதர்களிடம் உள்ள அரக்க குணங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழிப்பதற்காக முருகப்பெருமான் புறப்பட்டார். அவர் சூரர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சிவபெருமான் வைக்கத்தப்பன் கோவிலில் வைக்கத்தஷ்டமி நாளில் அன்னதானம் செய்ததாக கோவில் தல புராணம் சொல்கிறது.

இருப்பினும் அன்று சிவபெருமானுக்கு மட்டும் நைவேத்யம் கிடையாது. பிற நாட்களில் இங்குள்ள இறைவனுக்கு சாதாரண அன்னமே நைவேந்தியமாக அளிக்கப்படுகிறது ஆனால் அஷ்டமி நாளன்று சிவபெருமானே பக்தர்களோடு பக்தராக பந்தியில் அமர்ந்து விருந்து உண்பதாக நம்பப்படுவதால் அன்று நிவேதனம் கிடையாது.

இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதும், இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக கலந்து கொண்டு ஆசி வழங்குவார்கள் என்பதும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த அன்னதான நிகழ்வை மலையாளத்தில் ‘பிராதல்’ என்று அழைக்கின்றனர்.

கேரளக் கோயில்களுடன் நெருங்கிய தொடர்புடைய வில்வமங்கல சுவாமிகள் ஒருமுறை வைக்கத்திற்கு தரிசனம் செய்ய வந்தபோது கருவறையில் வைக்கத்தப்பனைக் காணாது திகைத்தாராம். ஆனால் வடபுறம் மேடையின் மீது அப்பன் இருந்து உணவருந்தியதையும் அவருக்கு பார்வதிதேவியே அன்னபூரணியாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த காட்சியையும் கண்டு மெய்சிலிர்த்தாராம்.

இன்றைக்கும் இறைவன் அமர்ந்து உணவருந்திய இடம் மான்ய ஸ்தானம் என்ற பெயரால் புனிதமான இடமாகக் கொண்டாடப்படுகிறது. அஷ்டமித் திருவிழாவன்று அங்கு விளக்கேற்றி வைத்து ஒரு பெரிய தலை வாழை இலையில் உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. முதலில் இந்த இலையில் பரிமாறிய பின்னரே பிற இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது.