ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா?

மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை.


ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசிதிபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும் கண்டறியாத மர்மம் தான். கொட்டும் அருவியின் ஒரு சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கைலாச நாதர் குகை உள்ளது. சித்தர்களும், தவமுனிவர்களும் ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய அதனைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்தருளிய இடம் இது தான்.

சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். இவற்றில் விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே, யாரும் காணாத படி அமைந்துள்ளது.

சுருளி அருவியில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற தலங்களில் ஒன்று சுருளி வேலப்பர் கோவில். தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில் இது.

இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக மாறுகிறது. எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

மஹாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலைஅரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகபெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து அருளினார்.

ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் முருகனை சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது. சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் தனது தவ வலிமையினால் அண்ட சராசரங்களையும் ஆளும் வரம் பெற்றான். அதன் பின்னர் தேவர்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் வதைத்தான். அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மஹாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் ராவணன் தனது படையுடன் இங்கு வந்து கூச்சலிட மஹாவிஷ்ணு பஞ்ச பூதமாய் உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிய உருவெடுத்து கோப நிலை காட்ட, இதைக்கண்டு நடுங்கி தன் படைகளுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பன் அருள் பாலிக்கிறார்.

முருகன், சுருளிவேலப்பன் சன்னதியில், சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும். இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசித்து வருவதாக ஐதீகம். ஆதலால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. ஆடி அமாவாசை, தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.

குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பரே மகனாக வந்து இறுதிச்சடங்குகள் செய்து முடித்தாராம். எனவே ஆண் வாரிசுகள் இல்லதவர்களும் இறுதி வேளையின் போது இவரை தங்கள் மகனாக பாவித்து வழிபட மன அமைதியும் வளமும் கிடைக்கும்.

இங்கு பெருமாள் சன்னதியில் சிவபெருமானும் இருப்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. விபூதி, குங்கும பிரசாதமும் தருகின்றனர். அத்துடன் சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இது உச்சிக்கால பூஜையில் மட்டும் கொடுக்கப்படுகிறது.

இங்கு பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவபெருமானுக்கு பரிவார மூர்த்தியாக தட்ஷிணாமூர்த்தியும் (சின்முத்திரையுடன்) இருக்கின்றனர். சிவபெருமானாருக்கு விசேஷ அபிஷேகங்கள் உண்டு. பால்குடம் எடுத்து முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த நீராடி, வழிபட, சகல பாவங்களும் நீங்கும். நல் வாழ்வு கிட்டும். தீராத வியாதி தீரும் என்பதும் நம்பிக்கை ஆகும். இங்கு அன்னதானம் செய்தால், நற்கதியும் மோட்ஷமும் கிட்டும் என்பதால், அன்னதானம் பிரதானமாய் நடைபெறுகிறது.

இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறி, மலைக்கோவில்களை “குன்று தோறாடல்” என்று பெயரிடுகிறார். சுருளி வேலப்பர் சுயம்புவாக தோன்றி, குடவரை சன்னதியில் அருள் பாலிக்கிறார்.அவர் அருகில் விநாயகர்,மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர்.