கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதன் அர்த்தம் இதுதான். வெளிச்சப் பூக்கள் எங்கெங்கும் மலரட்டும்!

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்கள் அனைத்தையும் அளிப்பார்.


ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அக்னியை வழிபடுவது மிகவும் முக்கியமானது. ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய முப்பது நாள்களைக் `கார்த்திக' மாதம் என்று சாந்திரமான முறையில் கூறுவர். இந்த மாதம் முழுவதுமே தீபங்களை ஏற்றி வழிபடுவதையே தீபாவளி என்று கூறுவர்.

ஐப்பசி மாதம் சதுர்த்தசியன்று தீபாவளிப் பண்டிகையை தீபங்கள் ஏற்றிக்கொண்டாடுகிறோம். அன்று மட்டுமல்லாமல் அந்த மாதம் முழுவதும் அதாவது அடுத்த அமாவாசை வரை வீட்டில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இதுவே நம் மரபு.

அவ்வகையில் கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்? - சௌரமான அடிப்படையில், சூரியன் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசியை அடையும் அந்த ஒரு மாதத்தின் நட்சத்திர மாக விளங்கக்கூடியது கிருத்திகை. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. சித்திரை மாதத்துக்கு சித்திரை; வைகாசிக்கு விசாகம் என்று சொல்வதைப் போல் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தைச் சிறப்பாகக் கொண்டாடச் சொல்கின்றன ஆகமங்கள்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் சூரியனின் சாரம் பெற்றவை. சூரியனாரின் அதிதேவதை யான அக்னியைக் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது நல்லது. நம் அக இருளை நீக்கி, உள்ளொளி பெருக்கி, நம் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மைகள் கிடைக்க இந்தத் தீப வழிபாடு உதவும்.

ஆறு நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பே கார்த்திகை. ஆறு என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களையும் அன்னையின் ஒரு முகத்தையும் குறிக்கும். சிவன், சக்தி என்பது நம் அறிவும் ஆற்றலுமாகும்.

மொத்தத்தில், இறைவன் ஜோதி ஸ்வரூபமே என்று நாம் உணர்ந்து கொள்வதற்கும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிடைத்திடவும் கிருத்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலை முதலான தலங்களில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நாமும் நம் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபட்டு, ஒளிமயமான வாழ்க்கைக்குப் பிரார்த்திப்போம்.