பரசுராமரைவிட ராமருக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன் தெரியுமா? பலராமனைவிட ஸ்ரீகிருஷ்ணருக்கு மதிப்பு ஏன்? அரிய தகவல்கள்!

தசாவதாரத்தின் தத்துவம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதே ஆகும்.


உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஜீவாதாரமாக விளங்குவது நீர். முதலில் இந்த உலகத்தில் தோன்றியதும் நீர் வாழ் உயிரினமே. அந்த நீரில் வாழுகின்ற மீன் ஆக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமான ஆமையாக கூர்மாவதாரம், நிலத்தில் மட்டும் வாழுகின்ற மிருகமாக வராஹ அவதாரம், மனிதன் பாதி, மிருகம் பாதியாக நரசிம்ம அவதாரமும், சிறு குழந்தையாக வாமன அவதாரமும் எடுத்த பகவான் முழுமனிதனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் பரசுராமர்.

ஆனால் இந்த பரசுராமர் காட்டிலேயே அலைந்து திரிந்து வாழுகின்ற மனிதனாக, ஒரு காட்டுவாசியாக தன் கையில் எப்போதும் கோடாரியை வைத்துக்கொண்டு கோபத்தை அடக்க இயலாத மனிதனாக வாழ்ந்தவர். ஆனால் இந்த உலகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.

தனி மனித ஒழுக்கத்தையும் வாழ்விற்கான இலக்கணத்தையும் வகுத்து அதனை அடுத்தவர்களுக்கு போதனை செய்யாமல் தனது வாழ்வில் கடைபிடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற வாழ்க்கை கலாச்சாரத்தை அவர் வாழ்ந்த யுகத்திலேயே கடைபிடித்து யுகங்களைத் தாண்டி உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் உத்தமன்.

பலராம அவதாரம் என்பது பசுக்களையும், வேளாண்மையையும் மனிதன் பரிபாலனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினாலும் துவாபர யுகத்தில் அவரது சமகாலத்திலேயே வாழ்ந்த கிருஷ்ணன் பலராமனை பின்னுக்குத் தள்ளி மக்களின் மனதில் முன் நிற்கிறார். அதற்குக் காரணம் கண்ணன் செய்த லீலைகள் அல்ல, குறும்புக்கார பிள்ளையாக விளையாடியது காரணம் அல்ல,

எல்லாவற்றையும் தாண்டி எட்டாவது அறிவினைப் பெற்ற ஒரு ஞானியாக, தத்துவ சிந்தனைகளை இந்த உலகிற்கு அளித்தவனாக நிற்பவன் ஸ்ரீ கிருஷ்ணன். பகவத்கீதை என்ற தத்துவ நூலின் மூலம் இந்த உலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவன்.

ஸ்ரீராமன் தனிமனித ஒழுக்கத்தை போதித்ததாலும், ஸ்ரீகிருஷ்ணன் வாழ்வியல் தத்துவத்தை உபதேசித்ததாலும் தசாவதாரத்தில் இவர்கள் இருவரும் தனிச்சிறப்பு பெறுகிறார்கள். அதனால்தான் ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்கள் என போற்றப்படுகின்றன.