ஏழைகள் புரட்சித்தலைவரை கடவுளாகப் பார்த்தனர், ஏன் தெரியுமா?

புரட்சித்தலைவருக்கு இருந்த வாக்குவங்கி என்பது முழுக்க முழுக்க ஏழைகள்தான். தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு எம்.ஜி.ஆர். ஒருவரால்தான் முடியும் என்று நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையை எம்.ஜி.ஆரும்.காப்பாற்றினார்.


ஒரு விளக்குத் திட்டம் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம் அடைந்தது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதை முதன்முதலில் அறிமுகம் செய்வதவர் புரட்சித்தலைவர்தான். ஏழைகள் வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்து புரட்சி செய்ததும் எம்.ஜி.ஆர்.தான். முதியோர்களுக்கு முதன்முதலாக உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது புரட்சித்தலைவர்தான்.

எம்.ஜி.ஆர். காலத்தில் 41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படி சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர். இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை, அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார் புரட்சித்தலைவர். 

இந்தியாவிலேயே முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர்.தான். முதியோர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதிய உணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொரு வீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்

விவசாயிகள், நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம் போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி தருவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில் உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.