கழகமே எனது குருதி... அ.தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம்... பிஞ்சிலே பழுத்தவர் உதயநிதி _ பொதுக்குழுவில் பொங்கிய எடப்பாடி பழனிசாமி

ஒருவழியாக அ.தி.மு.க. பொதுக்குழு பிரமாண்டமாக நடந்துமுடிந்துவிட்டது. இரட்டையர்களுக்கு இடையில் பிரச்னை என்று பேசப்பட்ட கருத்துக்கள் பொய் என்று நிரூபணம் ஆகும் வகையில், இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. வெற்றிக்கு உழைப்பதாக உறுதி எடுத்துக்கொண்டனர்.


இருவரது பேச்சையும் கேட்ட அ.தி.மு.க.வினர், ‘இந்த இருவரும் இணைந்துவிட்டால், எந்த எதிரியும் நிற்கவே முடியாது. வரும் தேர்தலிலும் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றியை ருசித்தே தீரும் என்று ஆனந்தப்பட்டார்கள்.

இன்று பொதுக்குழுவில் தமிழக முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடியின் பேச்சு ஹைலைட்டாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அ.தி.மு.க. மூன்றாவது முறையாக வெற்றியைத் தொடப்போகிறது என்பதற்கு உதாரணம்தான் நாங்குநேரி இடைத்தேர்தல் என்று கூறினார்.

மேலும், அவர் ஸ்டாலினை மிரட்டும் வகையில், ‘பொதுமேடையில் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு சவால் விட்டும் இன்னமும் அவர் வரவே இல்லை. அவர் கூறுவது எல்லாமே பொய். மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகள் பெற்றிருப்பதே இதற்கு சான்று. பெண் குலத்தை இழிவாகப் பேசிய உதயநிதி பிஞ்சிலேயே பழுத்துவிட்டார் என்று தி.மு.க.வினரை மிரட்டினார்.

அடுத்து, ‘என்னுடைய உடம்பில் ரத்தமாக அ.தி.மு.க. ஓடிக்கொண்டு இருக்கிறது. கழகமே எனது குருதி. என்னை முதல்வராக தேர்வு செய்து அறிவித்த ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்துக்கு நன்றி. நாம் திட்டமிட்டு செயல்பட்டால், நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி‘ என்று பேசினார்.