சுபிட்சம் தரும் சுந்தரகாண்டத்தின் மகிமை இதோ...

இராமாயணத்தின் சுவையான ஒரு பகுதியே சுந்தர காண்டம் என்ற அழகிய பெயரால் அழைக்கப்படுகிறது.


பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம் என ராமாயணத்தின் மற்ற பகுதிகள் கதை நிகழ்வை ஒட்டிய பெயர்களையே தாங்கி நிற்க, இப்பகுதி மட்டும் சுந்தர காண்டம் என்ற பெயரைக் கொண்டு விளங்குவது ஏன்? சுந்தரகாண்டமானது இராம காவியத்தின் நிகரில்லா நாயகனான ஸ்ரீராமனை விடுத்து அழகான ஆஞ்சநேயனைக் கதாநாயகனாகக் கொண்டது அது மட்டுமல்லாமல் சுந்தர காண்டத்தில் இயற்கையின் அழகு அபாரமான வர்ணனைகளுடன் ஆராதிக்கப்படுகிறது. சந்திரோதயத்தின் அழகும் அற்புத வர்ணனைகளோடு சித்தரிக்கப்படுகிறது.

அசோகவனம், மதுவனம் ஆகிய நந்தவனங்களைப் பற்றிய வர்ணனைகளை வாசித்தால் அங்கெல்லாம் சென்று ஆயுளுக்கும் இருந்து விடமாட்டோமா என்ற ஏக்கம் நம் மனதில் நிச்சயம் எழும். இவ்வாறு இந்தக் காண்டம் முழுக்க முழுக்க அழகுணர்வையே முன்னிலைப்படுத்துவதால் இதற்கு சுந்தரகாண்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர். தவிர சுந்தரகாண்டத்துக்கு என தனித்துவமான ஒரு தத்துவ பொருளும் உண்டு.

நிரந்தரமான ஆனந்தத்தை அளிக்க வல்லது முக்தி. மானிடர் அனைவரும் அனுதினமும் ஆண்டவனை வணங்குகிறார்கள். ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். யாத்திரை மேற்கொண்டு அவனி எங்கும் வலம் வருகிறார்கள். ஆனாலும் முக்தி பெறுவதற்கான வழி எது என்று எவருக்கும் எளிதில் விளங்க மாட்டேன் என்கிறது. வாழ்க்கை என்னும் ஆழ்கடலில் சிக்கி ஐம்புலன்களின் தீராத இச்சைகாளல் அலைக்கழிக்கப்பட்டு, நிலை தடுமாறி சீதாதேவியின் வடிவில் ஜீவாத்மா வேதனையில் வீழ்ந்திருக்கிறது.

அந்த ஜீவாத்மாவை உய்வித்து, மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விழையும் பரமாத்மாவான ஸ்ரீராமர், பரம குருவாகிய அனுமனை அனுப்புகிறார். ஆஞ்சநேயன் என்னும் குருவின் தரிசனம் மற்றும் அவரது உபதேசங்களால் பரமாத்மா தன்னை கைவிடாமல் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை பெற்று ஜீவாத்மா தெளிவடைகிறது. பரமாத்மாவுடன் இணைய ஜீவாத்மா எவ்வாறெல்லாம் தவிக்கிறது என்னும் உண்மையை குரு பரமாத்மாவிடம் எடுத்துரைக்கிறார். மேலும், ஜீவாத்மாவைக் காப்பாற்றி தம்மோடு சேர்த்துக் கொண்டு அதற்கு முக்தி அளிக்குமாறும் குரு பரமாத்மாவிடம் பரிந்துரைக்கிறார். இப்படி குருவாகப்பட்டவர் ஜீவாத்மாவைக் காப்பாற்றிக் கடைத்தேற வழி வகுக்கிறார்.

ஆஞ்சநேயன் என்னும் குருவைச் சரண் அடைதலே முக்தி பெற எளிய வழியாகும். இந்த தத்துவத்தை தனக்குள் பொதிந்து வைத்துள்ளது என்பதற்காகவே ஆன்மீக ரீதியாக சுந்தரகாண்டம் ராமாயண காவியத்தின் மற்ற காண்டங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. ஆயுள், ஆரோக்கியம், செல்வம் போன்ற நியாயமான கோரிக்கைகளையும், நிலையான முக்தியையும் அருள வல்ல சுந்தரகாண்டம் மக்களால் இல்லம்தோறும் பெரும் நம்பிக்கையுடன் காலம் காலமாக வாசிக்கப்பட்டு வருகிறது.

சுபிட்சம் நல்கும் சுந்தரகாண்டத்தை எல்லோரும் வாசித்து வளம் பல பெறுவோமாக.