தமிழகத்தில் முதன் முதலாக தோன்றிய ஐயப்பன் கோவில் என்ற சிறப்புக்கு உரியது கரூர் மாவட்டத்தில் கருப்பத்தூர் எனும் ஊரில் உள்ள ஐயப்பன் ஆலயம்.
ஐயப்பன் கோயிலுக்குப் போக ஆசையா பெண்களே? இதோ இந்தக் கோயிலுக்குப் போகலாமே!

விமோசனானந்தா குரு மகராஜ் என்பவர் ஐயப்பன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஐயப்பன் வழிபாட்டை வளர்க்கும் நோக்கத்தோடு நாட்டின் பல பகுதிகளில் ஐயப்பன் கோவில்களை நிர்மாணிக்க சபரிமலையில் சபதம் மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் ஐயப்ப வழிபாடு அவ்வளவு பிரபலமாகவில்லை.
முதன்முதலில் 1952 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காசியிலும், 1955 ஆம் ஆண்டு ஹரித்துவாரிலும், 1959 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலும், 1975ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் ஐயப்பன் கோவில்களை நிர்மாணித்தார்.
அந்த வரிசையில் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் காவிரி நதிக்கரை ஓரத்தில் கருப்பத்தூரில் ஐயப்பன் கோவிலுக்காக நிலத்தை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கிரையம் செய்தார். 1962 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள் கோயில் பணிகளை தொடங்க பூமி பூஜை போடப்பட்டது. அதே நேரத்தில் பிரதிஷ்டை செய்ய ஐயப்பன் விக்ரகத்தை கும்பகோணத்தை சேர்ந்த ஸ்தபதி ஒருவரை வைத்து கோவிலுக்கு அருகிலேயே உருவாக்கினார்.
விக்ரகம் தயாரானதும் திருச்சி மலைக்கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு விமோசனானந்தா தலைமையில் ஐயப்பன் விக்ரகத்தின் புனித பயணம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வைத்து சிலையை பூஜித்த பின்னரே கருப்பத்தூருக்குக் கொண்டுவரப்பட்டது.
கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் 1965-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று முன்னாள் சபரிமலை ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரியால் ஐயப்பன் விக்ரகம் கருப்பத்தூர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவில் உருவான செய்தி பரவியது. வெளியூர்களில் இருந்தெல்லாம் ஐயப்ப பக்தர்கள் வர தொடங்கினர் சனிக்கிழமை மண்டல பூஜை காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை இருந்தது.
பூஜைகளும் விழாக்களும் தொடர்ந்து தங்கு தடையின்றி நடந்து வந்தன. இந்நிலையில் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் சாலையின் உயரம் உயர்த்தப்பட்டது. கோயில் பள்ளத்தில் அமைந்திருந்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் கோயிலுக்குள்ளே வர ஆரம்பித்தது. இதனால் கோயிலை புதியதாக நிர்மாணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்பிருந்ததைவிட சுமார் 6 அடி உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 10 படிகளை கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். அர்த்த மண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காவல்புரிய ஆகமப்படி அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தில் சபரிமலையில் உள்ள ஐம்பொன் சிலை போன்றே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மகா மண்டபமும் சபரிமலையில் உள்ளது போல் அமைந்திருப்பது சிறப்பு. சபரிமலை செல்பவர்கள் மாலை அணிதல், இருமுடி கட்டுதல் போன்ற பூஜைகள் இங்கு பிரசித்தம்.
கோயில் வளாகத்தில் தென்மேற்குப் பகுதியில் கன்னிமூலை கணபதி சந்நிதியும் வடமேற்கு திசையில் மாளிகைபுரத்து அம்மன் சன்னதியும், கேரள ஆலய விதிப்படி கலசமும் விமானமும் அமைக்கப்பட்டுள்ளன. சபரி மலையில் பம்பா நதி உள்ளது போல் இங்கு அகண்ட காவேரி உள்ளது.. சபரி மலையில் சிவனை தரிசித்த பின் ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
அதுபோலவே இங்கு ஐயப்பன் ஆலயத்திற்கு எதிரே சிம்மபுரீஸ்வரரைத் தொழுத பின் ஐயப்பனை தரிசிக்கலாம். இங்கு அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்பது சிறப்பு. ஆண்கள் போன்று, பெண்களும் அர்த்த மண்டபம் வரை சென்று ஐயப்பனை வழிபடலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், பெண்கள் இங்கு இருமுடி கட்ட அனுமதி கிடையாது.
சபரிமலையில் நடைபெறும் வழிபாடுகள் இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சபரிமலைக்கு சென்று கிடைக்கும் பலன், இங்கு வந்து தரிசித்தாலே கிடைக்கிறது என்கின்றனர். சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. வருட உற்சவத்தில் மண்டல பூஜை, மகர ஜோதி, பங்குனி உத்திரம் ஆகியவை மிகச் சிறப்புடன் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறுகின்றன.