உச்சநீதிமன்றம் கூறியும், ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் ஏன்? வீரமணி ஆவேசம்.

உச்சநீதிமன்றம் கூறியும், ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் ஏன்? வீரமணி ஆவேசம்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுவோருக்கு விடுதலை அளிப்பதுபற்றி உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டும், அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை ஆதரவாகத் தீர்மானித்தது - ஆளுநரின் அனுமதிக்குக் கடிதம் எழுதியும், ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக அனுமதி அளிக்கவில்லை என்பது சரியானதல்ல - அம்மா அரசு என்று கூறப்படும் அ.தி.மு.க. அரசு இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை ஆளுநரும் உணரவேண்டுமென்றும், மேலும் காலதாமதம் செய்யாமல் எழுவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை 2014 இல் உருவானது. அந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு 18.2.2014 அன்று வழங்கிய தீர்ப்பில், அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவு - குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்கீழ், மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்சொன்ன மூவரை விடுதலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது.

அதன்பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 433 ஆவது பிரிவின் கீழ் இந்த மூன்று பேருடன், உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மூவர், தி.மு.க. ஆட்சியால் கருணை வழங்கப்பட்ட நளினி ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்யும் முடிவை தனது அமைச்சரவை முடிவாக எடுத்திருப்பதாக அந்நாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 19.2.2014 இல் அறிவித்தார்!

இதன்பிறகு ஏற்பட்ட பல சட்ட வியாக்கியானங்கள், சிக்கல்களால் 6 ஆண்டுகள் ஆகியும்கூட, அம்முடிவு செயல்படுத்தப்படாமல், தாமதிக்கப்பட்டே வருகிறது.

‘‘அம்மா அரசு’’ தான் என்று சொல்லி வரும் அ.தி.மு.க. அரசு, ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் போதிய அழுத்தம் தராமல், அம்முடிவை தள்ளிப் போட்டுக்கொண்டே போய், 28 ஆண்டுகளாக பல்வேறு ஏமாற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தி, மன உளைச்சலை நாளும் பெருக்கிக் கொண்டுள்ள வேதனையே தொடருகிறது!

கடந்த 4.11.2020 அன்று பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது, அந்த அமர்வு ஒரு முக்கிய சட்டப் பிரச்சினையைத் தெளிவுபடுத்தி, ஆளுநர் இவர்களை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது!

ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பின்னால் இருந்த சதிபற்றிய புலனாய்வு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தாது; அதோடு, 20 ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத புலனாய்வு, எழுவரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் மேற்கொள்ளவேண்டிய முடிவுக்குத் தடையாக இருக்கவேண்டியதில்லை என்றும் அந்த அமர்வு திட்டவட்டமாகக் கூறிவிட்டது!

இதற்கு மேலும் ஆளுநர் காலதாமதம் செய்வது என்பது அரசமைப்புச் சட்டப்படி இயங்கும் நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary S.C.), சட்டமன்றம் (Legislative) அதில் அறிவிக்கப்பட்ட அரசு முடிவு ஆகிய மூன்று முக்கிய துறைகளையும்பற்றி கவலைப்படாது, புறந்தள்ளும் அலட்சியம் ஆகும்! இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. இனியும் நியாயப்படுத்த முடியாத, காலதாமதம் செய்யக் கூடாத ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.