ஊரக வேலை உறுதித் திட்டத்தை விவசாயத்துக்கும் நீட்டிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

ஊரக வேலை உறுதித் திட்டத்தை விவசாயத்துக்கும் நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.


மருத்துவ குணம் கொண்ட மூலிகைககளின் சாகுபடிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயன்களை உழவர்களுக்கும் நீட்டிப்பதற்கான முன்னோட்டமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியா முழுவதும் மருத்துவ மூலிகை சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மருத்துவ மூலிகைகள் சாகுபடி செய்யப்படும் பரப்பளவை 25 லட்சம் ஏக்கர் என்ற அளவுக்கு விரிவுபடுத்தவும், மருத்துவ மூலிகைகளை பயிரிடும் உழவர்களுக்கு சாகுபடி செலவில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கவும் ஆயுஷ் அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது.

அதன்படி 142 வகையான மூலிகைகளின் சாகுபடிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக வேளாண் பணிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தான் நாடு முழுவதும் உள்ள உழவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான தொடக்கமாக மத்திய அரசின் இந்த திட்டம் அமைய வேண்டும். மருத்துவ மூலிகைகளை வளர்க்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட முக்கியமாக விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது; அதற்கான கடமையும் அரசுக்கு உள்ளது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உழவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இயற்கையின் கருணையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. வேளாண்மை செய்து, அதில் இலாபம் பார்த்து விட்டால், அது எட்டாவது அதிசயமாகக் கூட இல்லை....

பதினாறாவது அதிசயமாகப் பார்க்கப்படும் அளவுக்கு நிலைமை உள்ளது. அதனால், விவசாயத்தை எந்தெந்த வழிகளில் பாதுகாக்க முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

விவசாயம் இலாபம் ஈட்ட முடியாத தொழிலாக மாறியதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.... வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்து விட்டது ஆகும். அதற்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகள் அதிகரித்தது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் வேளாண்மை பணிகளுக்கு போதிய அளவில் ஆட்கள் கிடைக்காததும், அவ்வாறு கிடைத்தாலும் அவர்களுக்கான கூலி கட்டுபடியாகாத அளவுக்கு அதிகரித்து விட்டதும் தான்.

இவற்றில் இரண்டாவது அம்சத்துக்கு முழுக்க முழுக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தான் காரணம் ஆகும். வேலை உறுதித் திட்டத்திற்கு சென்றால் எளிதாக பணியாற்றி, அதிக ஊதியம் ஈட்டலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது தான் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததற்கு காரணமாகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் ஊரகப் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதேநேரத்தில் வேளாண் தொழிலுக்கு அத்திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது. ஊரகப் பொருளாதார மறுமலர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வேளாண் தொழிலை பாதுகாப்பதற்கும் ஒரே தீர்வு ஊரக வேலை உறுதித் திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிப்பது தான்.

ஏற்கனவே, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர், நிலச்சீர்திருத்த பயனாளிகள், நாடோடிகள், சீர்மரபினர், வன உரிமை சட்டத்தின் பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு சொந்தமான நிலங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேளாண் பணிகளுக்கு பணியாளர்கள் வழங்கப்படுகின்றனர். இதை அனைத்து சிறு, குறு உழவர்களின் நிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.