அன்றாடம் காய்ச்சியாக இருந்த ஜே.கே. ரித்தீஷ் பின்னாளில் சென்னையில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி அசத்தியவர்.
ராம்நாடு அன்றாடம் காய்ச்சி முகவை குமார்! சென்னை ஜே.கே. ரித்தீஷ் எனும் சாம்ராஜ்யம் ஆன கதை!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பூர்வீகமாகக் கொண்டவர் முகவை குமார். இவர் பிறந்தது இலங்கையிலுள்ள கண்டியில். 1970களில் இலங்கையிலிருந்து ராமநாதபுரம் திருவாடானை முகவை குமார் குடும்பம் குடிபெயர்ந்தது. மிகவும் எளிமையான மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் முகவை குமார்.
ராமநாதபுரம் மாவட்டம் திமுகவின் அடையாளங் களில் ஒருவராக இருக்கக்கூடியவர் சுப தங்கவேலன். இவர் முகவை குமாருக்கு தாத்தா முறை ஆவார். தாத்தா என்றாலும் கூட முகவை குமார் சுப தங்கவேலன் இடையே பெரிய அளவில் பேச்சு வார்த்தைகள் கிடையாது. இருந்தாலும் கூட திமுகவில் தீவிர களப்பணியாளராக தனது சிறுவயதில் முகவை குமார் செயல்பட்டு வந்துள்ளார்.
கையில் காசு இல்லாத நிலையில் செல்ல வேண்டிய இடத்திற்கு நடந்தே சென்று கொடுக்கும் பணியை முடித்து காட்டுபவர் முகவை குமார். சினிமா மீது முகவை குமாருக்கு தீவிர பற்று உண்டு. இதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்து அலைந்து திரிந்தார். தனது தாத்தா சுப தங்கவேலன் திமுகவின் முக்கிய புள்ளி என்று கோரி சென்னையில் திரையுலக வாய்ப்புகளை தேடி வந்தார்.
அப்போதுதான் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் நட்பு அவருக்குக் கிடைத்தது. முகவை குமாரின் வேலைகள் அனைத்தும் சிறிய பிசிறு கூட இல்லாமல் மிகவும் தெளிவாக இருந்தது. இதனால் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார் முகவை குமார். இதனையடுத்து முகவை குமார் கைகளில் பணம் விளையாட ஆரம்பித்தது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்த தென் மாவட்டங்களில் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்.
இதன் மூலமாக முகவை ராமநாதபுரத்தில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக முன்னேறினார். இதனிடையே சுதாகரனின் பினாமி சொத்துகள் முகவை குமார் செலவு செய்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. உண்மையில் சுதாகரனின் பணத்தைப் பெற்று அதனை இரட்டிப்பாக்கி அவரிடமே ஒப்படைத்துவர்தான் முகவை குமார். கையில் போதுமான அளவிற்கு பணம் புழங்க ஆரம்பித்த பிறகு முகவை குமாருக்கு சினிமா ஆசை வந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை வந்த முகவை குமார் ஜேகே ரித்தீஷ் ஆனார். தனது சொந்த செலவில் சொந்தமாக திரைப்படம் எடுத்து தானே கதாநாயகனாகவும் நடித்தார் ஜேகே ரித்தீஷ். இந்த நிலையில் சென்னையில் திரைப்படங்கள் எடுத்து வந்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் பழக்கம் படத்திற்கு கிடைத்தது. இதன் மூலமாக அழகிரியுடன் நெருக்கம் பாராட்டிய ஜேகே ரித்தீஷ் ராமநாதபுரத்தில் திமுகவின் முக்கிய புள்ளியாக வலம் வர ஆரம்பித்தார்.
திமுக மாவட்ட செயலாளர் சுப தங்கவேலன் ஸ்டாலின் ஆதரவாளராக இருந்த நிலையில் அங்கு ஜேகே ரித்தீஷ் கொம்பு சீவி தன்னுடைய பலத்தை அழகிரி நிரூபித்தார். இதன் பலனாக ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளராக 2009 தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றியும் பெற்றார் ஜேகே ரித்தீஷ். இதற்கிடையே சுதாகரன் பழக்கம் கிடைப்பதற்கு முன்னதாக சென்னைக்கு அடிக்கடி வரும் முகவை குமார் வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிக்காட்டும் பணியையும் செய்து வந்தார்.
இதன் மூலமாக கிடைத்த பழக்கத்தின் வாயிலாகவும் தனது ஏற்றுமதி இறக்குமதி தொழிலை விசுவரூபம் ஆக்கி ஒரு ரியல் எஸ்டேட் ஜாம்பவான் ஆகவும் ரித்தீஷ் உருவெடுத்தார். சென்னையில் ஹோட்டல்களையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள். மூத்த மகனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் ரித்தீஷின் லட்சியமாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே எமன் அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டார்.