சினிமா பாரடிசோ: டெண்ட் கொட்டாய் அனுபவம்
மரணத்திற்குள் பார்க்கவேண்டிய திரைப்படம்! சினிமா பாரடிசோ!!

இன்றைய சினிமா ரசிகர்களுக்கு, இந்த கலையின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தென்னங்கீற்று கூரை, சாக்கு மறைப்புகள், மணலைக் குவித்து உட்காரும் அனுபவம், மூன்று இண்டர்வெல், விளக்கு போடும் நேரங்களில் எல்லாம் தியேட்டருக்குள் முறுக்கு, கடலைமிட்டாய் வியாபாரம், ஓப்பன் கழிப்பறை எனப்படும் டென்ட் கொட்டகை அனுபவமும் முடிந்தேவிட்டது. ஆனால் சினிமா விஸ்வரூபமெடுத்த ஆரம்ப காலத்தில் எத்தனை பேரை நாயாய் பேயாய் ஆட்டிப்படைத்தது என்பதை இயல்பாகச் சொல்லும் இத்தாலிப் படம்தான் சினிமா பாரடிசோ.
இத்தாலியின் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் சால்வெடோர் பின்னோக்கிய பார்வையில் படம் தொடங்குகிறது. அவர் சொந்த கிராமத்தைவிட்டு வெளியேறி 30 வருடங்களாகிவிட்டது. இந்த நிலையில் ஊரில் ஆல்ஃப்ரெடோ இறந்துபோன தகவல் கிடைக்கிறது. படுத்தபடி பழைய நினைவுகளை அசைபோடுகிறார் சால்வெடோர்.
ஆறு வயது சிறுவனாக இருக்கிறான் சால்வெடோர். இரண்டாம் உலகப்போர் முடிந்து சில ஆண்டுகள் ஆனபிறகும் அவனது அப்பா இன்னமும் ராணுவத்தில் இருந்து திரும்பிவரவில்லை. உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அதனால் பள்ளியில் படித்த நேரம்போக மற்ற நேரங்களில் சர்ச்சில் ஒரு பாதிரியாரின் பிரசங்க நேரத்தில் மணியடிக்கிறான். குறிப்பிட்ட நேரங்களில் மணியடிக்க மறந்து தூங்க, ஒவ்வொரு முறையும் பாதிரியார் ஞாபகப்படுத்தவேண்டி இருக்கிறது. ஏன் இப்படி தூங்கிவழிகிறான் என்பதற்கு விடை அடுத்துக் கிடைக்கிறது.
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தியேட்டருக்குள் தெரிந்தும் தெரியாமலும் நுழைந்து சினிமா பார்க்கிறான். ஒவ்வொரு கேரக்டர் பேசும் வசனமும் அத்துப்படியாகும் அளவுக்கு தொடர்ந்து பார்க்கிறான். கேரக்டர் பேசும்போதெல்லாம் இவனும் பேசுகிறான். அன்றைய சினிமா தியேட்டர் எப்படியிருந்தது, மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதெல்லாம் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த தியேட்டரில் ஆபரேட்டராக இருக்கும் ஆல்ஃப்ரெடோவிடம் நெருங்குகிறான் சால்வெடோர். குழந்தை இல்லாத நடுத்தரவயது மனிதர் ஆல்ஃப்ரெடோவுக்கும் சால்வெடோருக்கும் இடையில் நட்பு வலுப்படவே, ஆபரேட்டர் ரூமில் இருந்து படம் பார்ப்பதை மிகவும் விரும்புகிறான். சால்வெடோரின் அம்மா எத்தனை முறை அடித்து இழுத்துப்போனாலும் மீண்டும் மீண்டும் சினிமா தியேட்டருக்குத்தான் வந்து சேர்கிறான்.
சினிமாவை பொதுமக்கள் பார்க்கும் முன்பு உள்ளூர் சர்ச் பாதிரியார் பார்த்து தணிக்கை செய்யும் நடைமுறை அப்போது உண்டு. சினிமாவில் முத்தக்காட்சி மற்றும் ஆபாச காட்சிகள் வரும்போதெல்லாம் படத்தைப் பார்த்து மணி அடிப்பார். உடனே ரீலுக்கு இடையில் பேப்பர் வைத்து, அந்தக் காட்சிகளை எல்லாம் வெட்டி தனியே சேர்த்துவைப்பார் ஆல்ஃப்ரெடோ. அந்தக் காட்சிகளை ஒளிந்திருந்து பார்க்கும் சால்வெடோர், அந்த வெட்டப்பட்ட பிலிம்களை கைப்பற்ற நினைப்பான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது முயற்சி தோல்வியடைகிறது.
இந்த நேரத்தில் எதிர்பாராத ஒரு தீ விபத்து சினிமா தியேட்டரில் நடக்கிறது. அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தியேட்டரில் இருந்து வெளியே ஓடிப்போக, சால்வெடோர் மட்டும் ஆபரேட்டர் ரூமில் இருக்கும் ஆல்ஃப்ரெடோவை காப்பாற்ற முயல்கிறான். புகை மூட்டத்தில் சிக்கி மயங்கிக்கிடப்பவரை காப்பாற்றிவிடுகிறான். ஆனால் அந்த விபத்தில் ஆல்ஃப்ரெடோவுக்கு கண் பார்வை பறிபோகிறது. ஆனாலும் அவரது கண்களாகவும் கைகளாகவும் இருந்து அவர் சொல்வதற்கு ஏற்ப சினிமா ஆபரேட்டராக சால்வெடோர் பணியாற்றுகிறான்.
சிறுவனாக இருக்கும் சால்வெடோர் இளைஞனாக மாறுகிறான். இப்போதும் பள்ளி முடித்ததும் சினிமா தியேட்டருக்கு வந்து ஆல்ப்ரெடோவுக்கு உதவுகிறான். தியேட்டரில் போடப்படும் ஒவ்வொரு சினிமா பற்றியும் இருவரும் விவாதிக்கிறார்கள். இன்னும் எப்படி எடுத்திருக்கலாம் என்று கதை சொல்கிறான் சால்வெடோர். அவனது திறமையைக் கண்டு மெச்சும் ஆல்ஃப்ரெடோ, ‘நீ உடனே பாரீஸ் போ... அதுதான் உனக்கு ஏற்ற இடம். நீ இயக்குனராக மாறவேண்டும்” என்கிறார். இந்த நேரத்தில் பள்ளிக்கு மாற்றலாகி வரும் அழகான பெண் மீது காதல் வயப்படுகிறான். அவள் அழகில் மயங்கியவன், பல்வேறு உபாயங்களை கையாண்டு, அவளை காதலில் விழவைக்கிறான். காதல் லட்சியத்துக்கு எதிரியாக இருக்கும் என்று வருத்தப்படுகிறார் ஆல்ஃப்ரெடோ. ஏனென்றால் சால்வெடோர் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்.
திடீரென ஒரு நாள் காதலி ஊர் மாறிப் போகிறாள். இந்த சூழலை பயன்படுத்தி சால்வெடோரை பாரிஸுக்கு அனுப்பிவைக்கிறார் ஆல்ஃப்ரெடோ. எந்தக் காரணம்கொண்டும் இந்த ஊருக்கு நீ திரும்பிவரவே கூடாது. உன் அம்மாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்புகிறார். அன்று போன சால்வெடோர் இன்று இத்தாலியின் மிகச்சிறந்த இயக்குனராகி விட்டான்.
மிகுந்த யோசனைக்குப் பிறகு ஊருக்குப் போகிறான். அம்மாவையும் ஆல்ஃப்ரெடோவின் மனைவியையும் பார்க்கிறான். அன்றைய தியேட்டர் இருந்த இடத்தையும் இப்போது புதிதாக கட்டப்பட்ட தியேட்டர்களையும் பார்த்து பெருமூச்சு விடுகிறான். ஆல்ஃப்ரெடோவின் இறுதிச்சடங்கில் பார்க்கும் ஒவ்வொரு முகத்தையும் தன்னுடைய டவுசர் காலத்து ஞாபகங்களுடன் பொருத்திப் பார்க்கிறான். ஊருக்குக் கிளம்பும்போது ஆல்ஃப்ரெடோவின் மனைவி ஒரு பார்சலை ஒப்படைக்கிறாள். இதனை நீ பார்க்கவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என்று சொல்லி அனுப்புகிறாள். அந்த பார்சலில் என்ன இருந்தது என்பதை திரையில் பாருங்கள், நெகிழ்ந்து போவீர்கள்.
சினிமா என்பது யாரோ ஒருவரது கனவு என்றாலும், அது எத்தனை பேருடைய மனதை உலுக்குகிறது, எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது, சினிமாவும் சினிமா தியேட்டர்களும் எப்படியெப்படி மாற்றங்களை சந்திக்கின்றன என்பதன் சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு என்றும் இந்தப் படத்தைச் சொல்லலாம். அதனால் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.
IMDB மதிப்பெண் : 8.5
நமது மதிப்பெண் : 68
பின்குறிப்பு :
1988ம் ஆண்டு இங்கிலாந்து மொழியில் வெளியான இந்தப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் கியூசெப் டோர்னடர். இது இவரது இரண்டாவது படமாகும்.
இந்தப் படம் இத்தாலியில் வெளியானபோது மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதன் நீளத்தை கிட்டத்தட்ட அரைமணி நேரம் குறைத்து வெளிய்ட்டதும் உலகெங்கும் வெற்றியைத் தொட்டது.
சினிமா ஆபரேட்டர் ஆல்ஃப்ரெடோவாக நடித்திருந்த பிலிப்பி நொய்ரெட், இந்தப் படத்துக்காக ஏராளமான விருதுகளை வாங்கினார்.