உள்ளாட்சித்துறையில் பணியிடங்களுக்கு பல லட்சம் லஞ்சம் விளையாடுகிறது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம்

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் ஓவர்சீயர் மற்றும் இளநிலை தொழில் அலுவலர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்திக் கொள்வதற்கான சுற்றறிக்கை துறை ஆணையரால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுவரை இளநிலை உதவியாளருக்கும் கீழ்நிலை பணிகளுக்கு - ஜீப் ஓட்டுநர், இரவு காவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் - மட்டுமே பஞ்சாயத்து யூனியன் மட்டத்தில் நியமனம் செய்யும் ஏற்பாடுகள் இருந்தன. கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நியமனம் செய்யப்படும்.

இளநிலை உதவியாளர் பணி கிராம நிர்வாக அதிகாரிக்கு மேல் மூன்றாம் நிலை பதவியாகும். இது ஏன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரையறைக்குள் உட்படுத்தப்படவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி.

இன்னும் நான்கு நாட்களில் எழுத்துத் தேர்வு துவங்க உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வினாத்தாளா அல்லது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனி வினாத்தாளா, எழுத்து தேர்வு எங்கே நடக்கும், மையங்கள் எவை, மையங்களில் கண்காணிப்பு பணியை கவனிப்பவர்கள் யார், விடைத்தாள்களை திருத்துவது யார், நேர்முகத் தேர்வு எங்கே, எப்போது நடக்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் பதில் இல்லை. இந்த நடவடிக்கை முழுக்க, முழுக்க ஊழலுக்கான ஊற்றுக்கண்ணே.

கேள்வித்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, விடைத்தாள்களை திருத்துவது அனைத்தும் மாவட்ட அளவிலேயே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளதானது பெருந்தொகை கையூட்டு கொடுப்பவர்களுக்கு கேள்வித்தாளை அளிப்பது, அதிக மதிப்பெண்கள் வழங்கி அவர்களை தேர்வு செய்வது போன்ற முறைகேடுகள் இப்போதே துவங்கியுள்ளதாக செய்திகள் உள்ளன.

ரூ.60,000-க்கு மேல் ஊதியம் கிடைக்கும் இந்த பணிகள் ரூ.20-30 லட்சம் வரை விலை பேசப்படுவதாகவும், பணம் கொடுத்தால் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற்றுத்தருவதாகவும் ஆங்காங்கே ஏலம் விடப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ஓவர் சீயர் பணிக்கு டிப்ளமா படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இந்த முறை பொறியாளர்களும் விண்ணப்பிக்கலாம் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. எனவே, டிப்ளமா படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு சிக்கலுக்கு உள்ளாகும்.

அதிமுக அரசு ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருப்பதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் இதன் மூலம் மேலும் உறுதிபெறுகின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.