கூலிப்படையை ஏவி பாலிமர் டிவி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்!

கூலிப்படையை ஏவி பாலிமர் டிவி செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன் மீது புகார் எழுந்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாலிமர் டிவி செய்தியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்தது.

அதாவது காவல் ஆய்வாளர் கஜேந்திரன் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் கந்துவட்டி கொடுக்காதவர்களை தனது போலீஸ் அதிகாரத்தை வைத்து கஜேந்திரன் மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் தூத்துக்குடி எஸ்பி ஆபிஸில் சிலர் திரண்டு சென்று காவல் ஆய்வாளர் மீது கந்துவட்டி புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் கஜேந்திரன் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் டிவி செய்தியாளர் முத்துவேல் கஜேந்திரன் மீதான புகாரை செய்தியாக்கி அதனை பாலிமர் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளார். இதனால் கஜேந்திரன் மீதான விசாரணை தீவிரம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பல்வேறு குற்ற வழக்குகளை தொடர்புடைய சண்முகநாதன் என்ற நபரை கூலிப்படையாக வைத்து நேற்று இரவு 9 மணி அளவில் முத்துவேலை ரமாரியாக அரிவாளால் வெட்ட வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கந்து வட்டி புகார் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளரை காவல் ஆய்வாளரே கூலிப்படையை ஏவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.