வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது.
தாழக்கோயில் – இந்திரன் இடி, மின்னல் வடிவில் வந்து இறைவனை வழிபட்ட தலம்! எங்கு இருக்கிறது?
வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலை 500' உயரமுள்ளது. மலையில் நாடொறும் உச்சிப்பொதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் 'பட்சி தீர்த்தம்' என்று பெயர்.
மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் - வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி) , இறைவி - சொக்கநாயகி. சுனை ஒன்றும் உள்ளது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். வடநாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம்' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச்செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது.
இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. வலம் வருவதற்கேற்ப நல்ல பாதையுள்ளது. விளக்கு வசதிகள் உள்ளன. இதைச் சேர்ந்த கிராமங்கள் சுற்றிலும் உள்ளன. அன்னக்காவடி விநாயகர், சனிபகவான் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்குமூ. இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அநுபவத்தில் உணர்ந்துள்ளனர்.
தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது.
இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.)
அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.
ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.
மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) ஒரு திங்கள் கிழமையில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறும். அங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும். சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோயில் விமானம் தெரிகின்றது. மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன் - ருத்ரகோடீஸ்வரர், இறைவி - அபிராமசுந்தரி, இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோயில்' என்றழைக்கின்றனர்.
புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
தாழக்கோயில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது. உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர். கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.
கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார்.
மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர். சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.
கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.