இன்று தைப்பூசம்! உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

இறைவன் முருகனை கும்பிட்டு வேண்டுதல் வைக்க தைப்பூசம் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஏனென்று தெரியுமா?


தை மாதம் வரும் பூச நட்சத்திரம், பெளர்ணமி தினம் தலைசிறந்த தினமாக ஆன்மிக அன்பர்களால் போற்றப்படுகிறது. ஏனென்றால் இது முருகப்பெருமானுக்கு உகந்த தினம் ஆகும். தமிழ்ப்பெரும் கடவுளுக்கு உகந்த நாள் என்பதால் இது தமிழர்கள் கொண்டாடவேண்டிய தினம்.


   இந்த தினத்தில்தான் இறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த உலகம் பிறந்தமைக்கு நாம் விழா எடுத்து மரியாதை செலுத்தும் நாள் என்றும் சொல்லலாம். மேலும் இந்த தினத்தில்தான் முருகப்பெருமான், தாருகாசுரனை வதம் செய்த திருநாள் என்றும் சொல்லப்படுகிறது.


   இன்றைய தினத்திற்கு மேலும் எத்தனையோ சிறப்புகள் உண்டு. சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமான் அன்னை பார்வதியுடன் ஆனந்தம் நடனம் ஆடி, தரிசனம் கொடுத்த தினமும் இன்றுதான்.


   இறைவன் முருகனை தரிசிக்க மிகவும் சிரமம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இன்றைய தினம் அருகிலுள்ள எதேனும் ஒரு கோயிலில் முருகப்பெருமானை நேரில்ச் சென்று தரிசனம் செய்தாலே போதும். இன்றைய தினத்தில் ஏதேனும் வேண்டுதல் வைத்தால், அடுத்த தைப்பூசத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது ஐதீகம்.


   அதனால்தான் இன்றைய தினம் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அலகு குத்துதல், காவடி, பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்காவடி எடுத்து இறைவனை வழிபடுவது தமிழரின் தனிச்சிறப்பாகும். பால் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி, பறவைக் காவடி என்று ஏராளமான காவடி எடுத்து இறைவன் முருகனுக்கு தங்கள் காணிக்கையை கொடுக்கிறார்கள்.

   இன்றைய தினத்துக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. ஆம், இன்றுதான் கடலூர் மாவட்டம் வடலூரில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் அடிகளார் இன்றைய தைப்பூச நாளில்தான் ஞானமுக்தி அடைந்தார். அதனால் இன்றைய இனிய தினத்தில் இறைவனை கும்பிட்டு வேண்டுதலைத் தெரிவியுங்கள், அத்தனை வேண்டுதலும் நிறைவேற்றுவார் இறைவன்.