டெஸ்ட் டியூப் குழந்தை - குழந்தையை பாதிக்குமா தாயின் தைராய்டு - வீடு மாறினால் குழந்தை கிடைக்குமா?

மருத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிதாக தகவல்கள் கிடைக்கும் சூழலிலும், டெஸ்ட் டியூப் பேபி என்றால் என்னவென்று புரியாதவர்கள் உண்டு. சோதனைக் குழாயில் குழந்தை வளர்வதாக நினைக்கிறார்கள்.


·         டெஸ்ட் டியூப் குழந்தை என்பது, செயற்கை முறையில் சினையூட்டம் மட்டும் மேற்கொள்ளும் சிகிச்சை ஆகும்.

·         ஆய்வுக் கூடத்தில் பெண்ணின் கரு முட்டையில் ஆணின் விந்தணுவை பதித்து சினையூட்டல் செய்யப்படுகிறது.

·         சினையூட்டல் மூலமாக உருவாகும் சினைக்கருவை, தாயின் கருப்பையில் வைத்ததும் இந்த சிகிச்சை முறை முடிவுக்கு வந்துவிடுகிறது.

·         அதன்பிறகு சினைக்கரு வளர்வதும் பிரசவம் அடைவதும் இயற்கை கர்ப்பத்தில் நிகழ்வது போலவேதான் இருக்கும்.

கரு முட்டை வெளிவருவதில் பிரச்னை, விந்தணுக்களில் பிரச்னை, சினைக்கரு உருவாவதில் பிரச்னை போன்ற அத்தனை குறைகளையும் இன்றைய நவீன மருத்துவம் மூலம் சரிசெய்துவிட இயலும் என்பதாலே டெஸ்ட் டியூப் பேபிக்கு உலகெங்கும் வரவேற்பு இருக்கிறது.

 குழந்தையை பாதிக்குமா தாயின் தைராய்டு

தாய்க்கு தைராய்டு குறைபாடு இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. கர்ப்பிணிக்கு தைராய்டு குறைவாக சுரந்தாலும் அதிகமாக சுரந்தாலும் உண்மையில் பாதிப்பு வருமா என்பதைப் பார்க்கலாம்.

·         கருவில் உள்ள குழந்தைக்கு முதல் 12 வாரங்கள் வரையிலும் தைராய்டு சுரப்பி உருவாவது இல்லை.

·         தாயின் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைக்கொண்டே கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

·         அதனால் தாய்க்கு ஏற்படும் தைராய்டு குறைபாடு காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என்பது உண்மையே.

·         தைராய்டு குறைபாடு இருந்தால் சிலருக்கு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அதனால் கருத்தரிப்புக்கு முன்பே பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தைராய்டு பிரச்னை இருந்தால், அதற்கேற்ப மருந்துகள் எடுத்துக்கொண்டு கர்ப்பம் தரிப்பது மட்டுமே குழந்தைக்கு நல்லது.

வீடு மாறினால் குழந்தை கிடைக்குமா?

குழந்தை இல்லாமல் வருத்தப்படும் தம்பதியரிடம், வீட்டை மாற்றுங்கள், அந்த ராசியில் குழந்தை பிறக்கும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. மருத்துவ ரீதியாக இப்படி சொல்வது ஏற்கத்தக்கதா என்பதைப் பார்க்கலாம்.

·         ஒரே வீட்டில் நீண்ட நாட்களாக வசிப்பது சலிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதால் தம்பதிக்குள் வெறுமை தோன்றியிருக்கலாம்.

·         புதிய இடம், புதிய சூழல் அமையும்போது தம்பதியருக்குள் காதல் உணர்வு அரும்புவதற்கும் புத்துணர்ச்சி ஏற்படவும் வழியுண்டாகும்.

·         புதிய இடத்தைப் பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் காரணமாக பெண்ணுக்கு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கவும் செய்யும்.

·         சுற்றுலா செல்லும்போது கிடைக்கும் சந்தோஷம், திருப்பம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வீடு மாற்றிப் பார்க்கலாம்.

வீடு மாற்றாமல் அறையின் அமைப்பை மாற்றுவது, அலங்காரத்தை மாற்றுவது போன்றவையும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுபோன்ற செயல்களால் நிச்சயம் குழந்தை கிடைக்கும் என்பது உறுதியில்லை.