ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு வழிமுறை இருக்கு... எப்படின்னு தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.


ஒழுக்கம், தன்னம்பிக்கை , விடாமுயற்சி பிறரிடம் அன்பு கூறுதல் ஆகிய அனைத்து பண்புகளையும் ஒரு மாணவனுக்கு கற்றுத்தந்து அந்த மாணவனை தலைசிறந்தவராக உருவாக்கித்தரும் பெருமையை கொண்டவர்கள் ஆசிரியர்கள். அன்னை, பிதா, குரு ,தெய்வம் என ஒரு பழமொழி உண்டு . அதில் தெய்வத்திற்கும் முன்பாக ஆசிரியரை தான் நாம் கூறுகிறோம் . அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களை போற்றும் விதமாக தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

"ஏட்டு சுரக்காய் சோத்துக்கு எடுபடாது" என்பது பழமொழி, இதற்கிணங்க ஏட்டுக் கல்வியை மட்டும் வைத்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நன்கறிந்த ஆசிரியர்கள் அதனை நம்முடைய வாழ்க்கை நடைமுறையுடன் ஒருங்கிணைத்து நமக்கு தேவையானதை கற்பித்து நம்முடைய அறிவாற்றலையும் வளர்த்துக் தரும் மகான்கள் என்றே கூற வேண்டும். தன்னலமில்லாத தியாக உள்ளங்களை கொண்டவர்களால் மட்டும்தான் இந்த பணியை சிறப்பாக செய்ய இயலும். 

ஆசிரியர் பணியை தன்னுடைய உயிர்மூச்சாக கொண்டவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த விழாவை கொண்டாடுவதற்கான முக்கிய காரணகர்த்தாவாக விளங்குபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் ஆசிரியர் துறைக்கு செய்த சேவையை கருத்தில் கொண்டுதான் கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் இவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.