தமிழர்களுக்கு பெருமை! உலக வங்கியின் தலைவராகும் தமிழச்சி!

உலக வங்கியின் தலைவராகும் வாய்ப்பு தமிழச்சி ஒருவருக்கு கிடைத்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்ததாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது உலக வங்கியின் தலைவர் பொறுப்பு. இந்த பொறுப்பில் தற்போது ஜிம் யாங் கிம் என்பவர் உள்ளார். பிப்ரவரி மாதத்துடன் உலக வங்கி தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக கிம் அறிவித்துள்ளார். அவரது பதவிக் காலம் 2022 வரை உள்ள நிலையிலும் தான் அந்த பதவியில் தொடர விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

   இதனை அடுத்து உலக வங்கியின் தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெயர் தான் உலக வங்கியின் தலைவர் என்றாலும் அமெரிக்க அதிபராக யார் உள்ளாரோ அவர் தேர்வு செய்யும் நபர் தான் உலக வங்கியின் தலைவராக முடியும். அந்த வகையில் டிரம்ப் தனது மகள் இவாங்காவை உலக வங்கியின் தலைவராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அமெரிக்க அதிபர் மாளிகை உடனடியாக மறுத்துவிட்டது.

   மேலும் இவாங்கா உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்படப் போவதில்லை என்றும் அதே சமயம் உலக வங்கி தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பு இவாங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.  இந்த நிலையில் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த இந்திரா நூயியை உலக வங்கியின் தலைவராக நியமிக்க தான் விரும்புவதாக இவாங்கா கூறியுள்ளார்.

  பெப்சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் சுமார் 12 வருடங்களாக இருந்த இந்திரா நூயியை தான் தனது ரோல் மாடலாக கருதுவதாகவும் இவாங்கா தெரிவித்துள்ளார். மேலும் இந்திராவை உலக வங்கித் தலைவராக்குவதற்கான பணிகளை இவாங்கா தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே 12 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த இந்திரா நூயி கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார்.

   இந்த நிலையில் இந்திரா நூயி பெயர் உலக வங்கி தலைவர் பெயருக்கு அடிபடுகிறது. 63 வயதாகும் இந்திரா நூயி இந்தியாவில் அதுவும் தமிழக தலைநகரான சென்னையில் பிறந்தவர். சென்னை தியாகராய நகரில் ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த நூயி மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு ஐஐடி கல்கட்டாவில் படித்த நூயி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை படிப்பை யேல் பல்கலைக்கழத்தில் முடித்தார்.

  ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தில் தனது பணியை துவங்கிய இந்திரா நூயி பிற்காலத்தில் உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான பெப்சியின் தலைமை பொறுப்பு வரை உயர்ந்தார். சுமார் 12 வருடங்கள் பெப்சி நிறுவனத்தை வழிநடத்திய அவர் தற்போது உலக வங்கியின் தலைவராகப்போவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி உலக வங்கியின் தலைவர் ஆவது தமிகத்திற்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கே பெருமை சேர்க்க கூடியது.