மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து புதிய சாதனை படைத்துள்ளது டிடிவி தினகரன் கட்சி.
மோசம் போய்ட்டோம்! கதறும் டெபாசிட் இழந்த அமமுக வேட்பாளர்! நழுவிய டிடிவி!

அதிமுகவில் இருந்து பிரிந்து சுயேட்சையாக போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வென்று தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தார் டிடிவி தினகரன். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்தார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தினகரன் முடிவு செய்தார்.
ஆனால் எந்த கட்சிகளும் தினரகனுடன் சேர முன்வரவில்லை. இதனை தொடர்ந்து 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தார் தினகரன். மத்திய சென்னையை கூட்டணி சேர்ந்த எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை வழங்கினார் தினகரன். அனைத்து தொகுதகளிலும் சூறாவளி பிரச்சாரம் செய்தார் தினகரன்.
அவர் பிரச்சாரம் சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. இதனால் பல தொகுதிகளில் அமமுக - திமுக கூட்டணிக்கு இடையே தான் போட்டி என்று பேச்சு எழுந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் இது அனைத்தையும் பொய்யாக்கிவிட்டது. போட்டியிட்ட 38 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் இருந்தும் அமமுக முகவர்கள் காலையிலேயே வெளியேறினர். பல்வேறு தொகுதிகளில் கமல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளே தினகரன் வேட்பாளர்களுக்கு கிடைத்தது. தினகரன் பேச்சை நம்பி இவர்கள் அனைவருமே பல கோடி ரூபாய் செலவு செய்திருந்தனர்.
தென் சென்னையில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்திருப்பார் என்று கூறுகிறார். இதே போல் தூத்துக்குடி, தஞ்சையிலும் அமமுக வேட்பாளர்கள் பணத்தை அள்ளி வீசினர். ஆனால் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து வேட்பாளர்களில் பலர் ஆறுதல் தேடி டிடிவியை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் டிடிவி யாரிடமும் பேசவில்லை. மேலும் அவரது உதவியாளர்களும் அண்ணன் அப்செட் என்று தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் அளித்துள்ளார். இதனால் வட்டிக்கு வாங்கி செலவு செய்த தொகையை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் கதற ஆரம்பித்துள்ளனர்.