மதங்களின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது மாபெரும் தவறு.. டிடிவி தினகரன் அதிரடி!

மதசார்பற்ற இந்திய நாட்டில் மதங்களின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது குற்றமாகும் என அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அதிரடியாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.


சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தை அடுத்து நாடெங்கிலும் பலவித போராட்டங்களும் வன்முறைகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர் போன்ற இடங்களிலும் போராட்டங்களும் வன்முறைகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக இந்து, கிறிஸ்தவர்கள் என பல மதத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் திமுக கட்சியை சார்ந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை துவங்கி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுமார் இரண்டு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அதனை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். இந்நிலையில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் தற்போது இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமமுக கட்சியின் சார்பில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் மதசார்பற்ற இந்திய நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது மாபெரும் குற்றம் என அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால்தான் குடியுரிமை சட்டத்தை பலரும் எதிர்த்தும் வருகின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.