விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் எப்படி இருக்கு? ஒரு நேர்மையான விமர்சனம்!

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்


சினிமா என்பது இன்றும் பெரும்பாலான மக்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வாழ்க்கை பல்வேறு சிக்கலும், டென்ஷனுமாக நகருவதால், தியேட்டரில் படம் பார்க்கப் போகும் கொஞ்சநேரமாவது சந்தோஷமாக கழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அதனால்தான் சிரிப்பு மூட்டும் பேய் படங்களுக்கு இன்னமும் நல்ல கிராக்கி இருக்கிறது. கலைப்படம், நிஜ வாழ்க்கை என்று ஆரண்யகாண்டம் இயக்குனர் தியாகராஜன் இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

சினிமாவை ஒரு பொழுதுபோக்கு என கருதுபவன் உள்ளே போனால் பைத்தியமாகத் திரும்புவான் என்பதற்கு உறுதியளிக்கும் வகையில் டென்ஷனான திக்கான நிஜமான கதை. இப்படியொரு கதையை தமிழில் எந்த ஒரு இயக்குநரும் முயற்சி செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. அதே நேரம் முயற்சி செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மூன்று கதைகளின் சங்கமமே சூப்பர் டீலக்ஸ்.

ஆணாக ஓடிப்போன விஜய சேதுபதி, அரவாணியாகத் திரும்பி வருகிறார். அதனால் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் இடையில் ஏற்படும் சிக்கல் முதல் கதை.

கண்ணுக்கு நிறைந்த கணவர் இருந்தாலும் பழைய காதலனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார் சமந்தா. அந்த சந்தோஷமான தருணத்தில் செத்துவிடுகிறான் காதலன் (எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறே...) பிணத்தை டிஸ்போஸ் செய்வதற்கு முன்வரும் கணவன், கொலையை மறைக்க உதவும் போலீஸுக்கும் இடையிலான கசமுசா அடுத்த கதை.

மூன்றாவது இதைவிட மோசம். தன்னுடன் படிக்கும் பையனின் அம்மாவின் செக்ஸ் வீடியோவை பார்க்கிறான் ஒருவன். இதனால் டென்ஷனாகும் பையன் கோபத்தில் கத்தியெடுக்கிறான். அதனால் ஏற்படும் விபரீதம் அடுத்த கதை.

இந்த மூன்று கதைகளையும் ஒரே நேரத்தில் படித்தாலே திகிலெடுக்கிறது, இந்த மூன்றும் ஒரே நாளில் நடந்தால் என்னவாகும் என்பதை தைரியம் உள்ளவர்கள் திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மனசுக்குள் ஏகப்பட்ட வன்மம் இருக்கும் ஒருவரால்தான் இப்படிப்பட்ட நல்ல படைப்பு(?) தரமுடியும். தியாகராஜனை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அதேநேரம் இந்தப் படத்தை அவார்டுக்கு அனுப்பி வைக்கலாம்.