மாநகராட்சியில் சுக்குமல்லி கருப்பட்டி காபி

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 16


சைதை துரைசாமி வீட்டில் தயாராகி மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்படும் சுக்குமல்லி கருப்பட்டி காபியின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். எனவே, அதனை குடிப்பதற்காக பல அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் அடிக்கடி மாநகராட்சிக்கு வருவதுண்டு.

சுக்குமல்லி கருப்பட்டிக் காபி குடித்த அலுவலர் ஒருவர், ‘இதே போன்று தரமான மூலிகை காபி அல்லது டீ நம் கேண்டீனில் கிடைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். அப்போது தான் மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டுறவு சங்கம் நடத்திவரும் உணவகம் சிறப்பாக நடத்தப்படவில்லை என்பது சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

உடனடியாக அந்த உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 30 ரூபாய்க்கு வழங்கப்பட்ட மதிய உணவு சுவையும் மணமும் தரமும் இல்லாமல் மிகவும் சுமாராக இருந்தது. அதோடு, அந்த கேண்டீன் சரிவரப் பராமரிக்கப்படாமல் முகம் சுளிக்கச் செய்யும் அளவுக்கு சுகாதாரத் சீர்கேட்டுடன் இருந்தது.

‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று சொல்லி வாக்குகள் பெற்று ஆட்சியில் அமர்ந்த சைதை துரைசாமி, அந்த லட்சியத்தையே தன்னுடைய டேபிளிலும் எழுதி வைத்திருந்தார். முழு சென்னையையும் சுத்தப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில் திட்டமிட்டு வந்தவர், தான் பணியாற்றும் தலைமையகத்தில் இப்படி ஒரு சுகாதாரக் குறைகளுடன் உணவகம் இருப்பதைக் கண்டு அதிர்ந்தே போனார்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், மாநகராட்சிக்கு வரும் நபர்கள் இந்த கேண்டீனைப் பார்த்தாலே, மேயர் நிர்வாகம் சரியில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்பதால், முதல் வேலையாக அந்த உணவகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டார்.

ஏனென்றால் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அறிந்தவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மரணத்தில் கிடைத்த அந்த விழிப்புணர்வை இன்று வரையிலும் தான் தொடர்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆரோக்கிய பாடம் நடத்திவருகிறார். அவரது முயற்சியால் அங்கே உருவானது மூலிகை உணவகம்.

- நாளை பார்க்கலாம்.