வெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..

மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை அ.தி.மு.க. பெற்றே தீரும் என்பது நான் எடுத்திருக்கும் ரகசிய சர்வே மூலம் உறுதி ஆகியிருக்கிறது. எனவே, அனைவரும் எந்த குழப்பமும் இல்லாமல் வேலையைத் தொடங்குங்கள் என்று முதல்வர் பேசிய தகவல் கிடைத்திருக்கிறது.


அப்படி என்ன பேசினார் முதல்வர் என்று கேட்டோம். ’’வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். 2011, 2016 தேர்தல் வெற்றியை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்குத் தனிப்பட்ட முறையில் உள்ளது. அண்மையில், வாரம் இருமுறை இதழ் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என சொல்லப்பட்டிருந்தது. உங்களில் எத்தனை பேர் இதைக் கவனித்தீர்களோ தெரியாது.

இதுபோக வேறு ஒரு தனியார் ஏஜென்சி மூலமும் நான் நடத்த சொன்ன சர்வேயிலும் நமக்கு சாதகமான முடிவுதான் தெரியவந்திருக்கிறது. 

நாம் தந்த பொங்கல் பரிசு 2500, விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு வழக்குகள் தள்ளுபடி, மாணவர்களுக்கான ஆல் பாஸ் அறிவிப்பு, கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா, மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இதெல்லாம் நமக்கு சாதகமாக மாறி இருக்கு.

இனி நான் வெளியிடப் போகும் அறிவிப்புகளும் நமக்கு கைகொடுக்கும். இதுபோக திமுகவையும், அதன் கூட்டணியையும் கலகலக்க வைப்பதற்கான வேலையையும் டெல்லி தொடங்கிடுச்சு. அது தொடர்பான சில தகவல்களை என்னிடமும் சொல்லி இருக்காங்க. அது என்னவென்று வரும் நாட்களில் நீங்களே தெரிஞ்சுப்பீங்க.

அதனால் உங்களோட தயக்கங்கள், விருப்பு வெறுப்புகளை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு, தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்க .ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகள் என்னவென்று பாருங்க.. அம்மா இருக்கும்போது, தேர்தலில் எப்படி கவனம் செலுத்துவோமோ அந்த மாதிரியே இப்பவும் களமிறங்குங்க’’என கூறியுள்ளார்.

இந்த விஷயம் அறிந்து அ.தி.மு.கவினர் குஷியாக தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டார்களாம்.