சிவனுக்கு இந்திரன் அமைத்து கொடுத்த அஷ்ட கஜ விமானம்! எங்கு இருக்கிறது தெரியுமா?

Zoom In Zoom Out

தேவலோகம் அன்று மிகவும் அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்திரசபையில் தங்கத்தில் முத்துக்கள் பதித்த சிம்மாசனத்தில் வீற்றிருந்து ரம்பை, ஊர்வசி நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தான் இந்திரன். அப்போது அங்கு வருகிறார் பிரகஸ்பதி. சோமபானத்திலும், நடனத்திலும் தன்னை மறந்திருந்த இந்திரன் பிரகஸ்பதியை கவனிக்கத் தவறினார்.

பிரகஸ்பதி தேவகுரு, அதனால் அவருக்கு கோவம் வந்துவிட்டது. உடனே ’உன் செருக்கழிய நீ அழிவாய்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டு விட்டார்.

இந்திரனின் பொன்னிறம் உடனே மங்குகிறது. இந்திரன் நோயில் வீழ்கிறான். தேவலோகம் இப்போது அல்லோல்படுகிறது.  


பதறிப்போன இந்திரன் தன் சுய நினைவுக்கு வருகிறான். பிரகஸ்பதியிடம் சென்று மன்னிப்பு கேட்கிறான். தேவகுரு அவனை சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கிக் கொள்ளச் சொல்லிவிடுகிறார்.

எனவே இந்திரன் பூலோகம் வந்து கைலாய மலையில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபடுகிறான். அப்பொழுது ’தென்புறமாக உள்ள கடம்ப வனத்திற்குச் சென்று வேள்வி செய்து சாபம் நீங்குவாயாக’ என்று அசரீரி கேட்கிறது.

உடனே இந்திரன் கடம்பவனம் தேடி வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கிறார். சித்திரா பௌர்ணமியின் போது இந்திரன் முன்பாக கடம்ப மரத்தினடியில் தோன்றும் சிவபெருமான் இந்திரனின் சாபத்தை நீக்குகிறார்.

மனம் மகிழும் இந்திரன் கடம்பவனத்தில் சுயம்புவாக தோன்றிய சிவபெருமானைத் துதித்துப் போற்றி அவருக்கு அஷ்டதிக்கையும் காக்கும் கஜங்கள் (யானைகள்) தாங்கும் ஒரு விமானத்தை அமைக்கிறான். இந்துக் கோயில்கள் தொடர்பில் விமானம் எனப்படுவது, இறைவனின் உருவம் வைக்கப்படுகின்ற கருவறைக்கு மேல் அமைக்கப்படுகின்ற பட்டைக்கூம்பு வடிவக் கட்டிடக்கூறு ஆகும்.

கிழக்கில் இந்திரனின் ’ஐராவதம்’, தென்கிழக்கில் அக்னி தேவனின் ’புண்டரீகன்’, தெற்கில் எமனின் ’வாமனன்’, தென்மேற்கில் நிருத்தியின் ‘குமுதன்’, மேற்கில் வருணனின் ‘அஞ்சான்’, வடமேற்கில் வாயுவின் ‘புஷ்பதந்தன்’, வடக்கில் குபேரனின் ’சர்வபௌமன்’, வடகிழக்கில் ஈசானனின் ‘சுப்ரதீகன்’ என அஷ்ட கஜங்கள் தாங்கிப்பிடிக்கும் இந்திரன் அமைத்த விமானமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கருவறை விமானமாக உள்ளது.

More Recent News