பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்

அந்தக் கட்சிக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. அரைத்த மாவையே அரைத்திருக்கும் இந்த பட்டியலைப் பார்த்து கொதிப்படைந்தவர்கள் திமுகவை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் ஐயாத்துரை பாண்டியன் இதற்கு பிள்ளையார் சுழி போட்டு அமமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.


திமுக வேட்பாளர் பட்டியல் குளறுபடிகளுக்கு எல்லோரும் ஐபேக்கைத்தான் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் ஐபேக் தரப்பில் விசாரித்தால் அவர்கள் வேறு மாதிரியான புகார்களை அடுக்குகின்றனர். இது தொடர்பாக ஐபேக்கின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது ;

‘’ தேர்தல் வெற்றிக்கு வேட்பாளர் தேர்வும் மிக முக்கியம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் நாங்கள். தமிழகம் முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சர்வே எடுத்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து கொடுத்தோம். இதில் முதலாமவர் டபுள் ஒகே. இரண்டாவது நபர் ஓகே. வேறு வழியே இல்லாத நிலையில் மூன்றாவது நபரை செலக்ட் செய்யலாம் என சொல்லியிருந்தோம்.

எங்கள் தேர்வில் இளைஞர்களுக்கும், பெண்களும் நிறைய இருந்தனர். இதேபோல ஏற்கனவே பலமுறை எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு கடிவாளம் போட்டிருந்தோம். கடந்த வாரம் நாங்கள் பைனல் ரிப்போர்ட்டை கொடுத்தோம். அப்போது ’உங்கள் ரிப்போர்ட் பெரும்பாலும் ஒகே ஆகும்’ என ஸ்டாலின் உறுதியளித்தார்.

ஆனால் அடுத்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் தொடர் அழுத்தங்களால் பட்டியலை கடைசி நேரத்தில் ஸ்டாலின் மாற்றியிருக்கிறார். மூன்று இரண்டாக, இரண்டு ஒன்றாகியிருக்கிறது. இதனால்தான் பெரும்பாலான பெரிசுகளுக்கு மீண்டும் இடம் கிடைத்திருக்கிறது. புதியவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்’’

இவ்வாறு அவர் கூறினார்.