மார்கழி மாதத்தில் தினமும் ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கு இத்தனை சிறப்புகளா!

உலகில் மட்டுமின்றி இலக்கிய வகையிலும் திருப்பாவை தனக்கென ஒரு தனி தகுதியை பெற்றுள்ளது.


திருப்பாவை பனிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் 473-503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். ஒவ்வொரு பாசுரத்தைக் கொண்டே எல்லாப் பொருள்களையும் அறியலாம் என்பர். ஒரு பெரிய காட்சியினை மற்றும் தோற்றத்தினை, ஒரு சிறிய கண்ணாடி காட்டிவிடுவதைப் போல திருப்பாவையில் முதற்பாட்டே பல உண்மைகளை உணர்த்துகின்றது.

மேலும், இந்த பாட்டில் சிறந்த சொற்கள், சிறந்த இடங்களில், சிறந்த வகையில் அடுக்கப்பெற்றுள்ளதால் செல்வப்பாட்டு என்றும் இப்பாடலை கூறுகின்றனர். திருப்பாவையில் உள்ள சொற்கள் வெளிப்படையாகத் தோன்றும் பொருள் ஒன்றிருக்க, உள்ளுற ஆழ்ந்து பார்க்கும்போது கிடைக்கும் உள்ளுறைப்பொருள் வேறொன்றும் இருப்பதாக சான்றோர்கள் கருதுகின்றனர்.

ஆண்டாள் அருளிய பாசுரங்களை திருப்பாவை என்று அழைக்கின்றோம். ஆனால், ஆண்டாள் அதற்கு சூட்டிய பெயர் சங்கத் தமிழ் மாலை முப்பது என்பதாகும். ஆண்டாளைப் பற்றியும், அவர் பாடிய திருப்பாவையின் சிறப்பு பற்றியும், அவரை வாழ்த்திய வாழ்த்துரையும் ஆன்றோர்களால் இயற்றப்பட்டு இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

மாதவனாகிய எம்பெருமாளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் இசைக்கப்படுவதே திருப்பாவையின் பெரும் சிறப்பாகும்.

எங்கெல்லாம் பெருமாளின் திருக்கோவில்கள் உள்ளதோ அங்கெல்லாம், ஆண்டாள் தனக்கும் ஒரு தனி சன்னதியை கொண்டுள்ளார். ஒரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியில் வாழும் மக்கள் தமது துன்பங்கள் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் ஆண்டாள் நமக்கு கூறுகிறார்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

என்ற ஆண்டாளின் முதல் பாசுரமே பெருமாள் திருத்தலங்களில் மார்கழியில் பாடப்படும் ஒப்பற்ற பாசுரமாகும்.