புரட்டாசி சனிக்கிழமையில் திருமால் தரிசனம்! நிம்மதியும் முக்தியும் நிச்சயம்!

பூர்வீகத்தில் பெருமாள் அவதார ரூபனாக பூமியில் தோன்றிய மாதம் புரட்டாசியாகும்.


இம்மாதத்தில் குறிப்பாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து திருமால் சிலை அல்லது திருவுருவப்படத்திற்கு துளசியால், மலர்களால் அர்ச்சித்து வணங்குவர். விரதம் இருப்பவர் குளித்து முடித்து நெற்றியிலும் மார்பிலும் கைகளிலும் திருநாமம் கோடுகளைப் போட்டு பெருமாளிடம் பக்தி கொள்வர்.

நெய்ப் பொங்கல், பால்பழம், பச்சரிசி மாவுடன் வெல்லம் சேர்த்து பிசைந்து மாவிளக்கு வைத்து பெருமாளுக்கு பூஜை செய்வர். புரட்டாசி மாதம் முழுவதும் அல்லது சனிக்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி உடை உடுத்தி திருமால் கோவிலுக்கு செல்வர். சிலர் தம் வீடுகளில் பக்தர்களை அழைத்து திருமால் பற்றிய பஜனை பாடல்கள் பாடி வணங்குவர்.  

திருமாலின் அருள்பெற பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் செய்தாலும் பெருமாளின் திருநாமமான நாராயணா, கோவிந்தா, கேசவா, பள்ளிகொண்ட திருமாலே என அழைத்து ஜபித்தாலும் பலன் கிடைக்கும். இடர்கள் காணாமல் போகும். இதை ஸ்ரீமத் பாகவதம் விஷ்ணோ சர்வபாம் பிரணாசநம் எனச் சொல்கிறது. மனதால் திருமாலை எண்ணி திருநாம சங்கீர்த்தனம் சொன்னால் துயர்கள் தீயுனுள் பொசியும் என ஆண்டாளும் சொல்கிறார். 

ஸ்ரீஹரி நாமம் தியானத்திற்கு உகந்தது. அதனால் பாபங்கள் இல்லாது போகும் என வேதங்களும் உபநிஷதங்களும் விளக்குகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்து பல்வேறு பெருமாள் ஆலயங்களுக்கு மக்கள் சென்று வருவர். திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கட்ராமா, கோவிந்தா, கேசவா எனச் சொல்லி மாவிளக்கு ஏற்றுவர். பின்னர் மாவைப் பிசைந்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பர்.  

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை, மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெறும். மூன்றாம் சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமார் வாகனத்தில் எழுந்தருளுவார்.  

பெருமாள் கோயிலைப் போல ஆஞ்சநேயர் தளங்களிலும் மூன்றாம் சனி விசேஷம். நான்காம் சனிநாள் நரசிங்கப் பெருமாள் தலம் அல்லது திருக்குடந்தை திருப்பதி என்ற ஸ்ரீதேவி-பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் சென்றும் பெருமாளை தரிசிக்கலாம். அங்கு மூலவராக வெங்கடாஜலபதி தனிச் சன்னதியில் பத்மாவதி தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர், விஷ்ணுவின் தசாவதாரங்களையும் வணங்கி அருள் பெறலாம். 

திருவேங்கடமுடையான் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். பிரம்மதேவனால் பிரம்மோற்சவ விழா தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அது பிரசித்தமாக பத்து நாட்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் பூர்வீக புரட்டாசி பூஜை முறைககள் இன்றும் அதே மாதிரி நடக்கிறது. எல்லாக் கோயில்களுக்கும் சென்று வணங்க முடியாதவர்கள் அருகிலுள்ள எந்தப் பெருமாள் கோயிலுக்கும் சென்று புரட்டாசி மாத பூஜைகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.