நாளை தொடங்குகிறது ஆடி மாதம்! என்னவெல்லாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது.


இதில் தஷ்ணாயண புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. அம்மனுக்கு உகந்தது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்றஆடி! பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் 'வாராஹி நவராத்திரி' இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.

ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்

ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.