ஸ்பெஷல் பிரைவேட் விமானத்தில் ஸ்டாலின்... இப்போதே முதல்வர் பந்தாவா?

எடப்பாடி விமானத்தில் போய் வெள்ள சேத பகுதிகளைப் பார்வையிட்டதை கிண்டலும் கேலியும் செய்த ஸ்டாலின், இப்போது தனி சிறப்பு விமானத்தில் பறந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினின் பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு முதலமைச்சர் போல மாறிக்கொண்டே வருவதாக திமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அடுத்த ஆட்சி திமுக., நான் முதல்வர் என்ற கனவில் மிதக்கிறார். அது மட்டுமல்ல, இப்போதே யார் யாரெல்லாம் லோக்கல் அமைச்சர்கள், யாரெல்லாம் டெல்லியைப் பார்ப்பது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டாராம்.



இதன் உச்சகட்ட பந்தாதான் சேலத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் பயணம் செய்தது என்று சொல்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு சேலத்துக்கு  உதவியாளர் தினேஷ் திருமணத்துக்குப் போனார் ஸ்டாலின். அப்போதுதான் தனி விமானத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.



ஸ்டாலின் பயன்படுத்திய விமானம் யாருடையது என்று விசாரித்தோம். அது, திரிவேணி குரூப்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாம். சேலத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் கிட்டத்தட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை, ஆனால் சிறப்பு விமானத்தில் ஜம்மென்று பொன்முடியுடன் சேர்ந்து பயணம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி விமானத்தில் சேத மதிப்பீடுகளைப் பார்த்ததற்கு கடுமையாக விமர்சனம் செய்த ஸ்டாலின், அதற்குள் தனி விமானத்தில் சொகுசு பயணம் போயிருப்பதைக் கண்டு அவரது கட்சிக்காரர்களே கடுப்பாகிறார்கள். அவராவது வெள்ள சேதத்தைப் பார்க்கப்போனார். ஆனால், ஸ்டாலின் கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட தனி விமானத்தில் போயிருக்கிறாரே என்று விமர்சனம் செய்கிறார்கள்.



முதல் அமைச்சர் ஆவதற்குள்ளாகவே இந்த அலப்பரை என்றால், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ..?