சோனிக் பூம்..! பெங்களூருவை மிரண்டு பதற வைத்த பெருவெடிப்பு சப்தம்..! வேற்றுகிரகவாசிகள் வந்தனரா?

பெங்களூரவில் இன்று பிற்பகல் கேட்ட பெரு வெடிப்பு சப்தம் காரணமாக அங்கு வேற்றுகிரகவாசிகள் வந்துவிட்டதாக பரபரப்பு நிலவிய நிலையில் அந்த சப்தத்திற்கு காரணம் என்ன என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


பெங்களூருவில் இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் திடீரென பெரு வெடிப்பு சப்தம் ஒன்று கேட்டது. இதுவரை யாரும் கேட்காத அளவில் மிகவும் சப்தமாக இருந்த காரணத்தினால் அது என்ன என்று பலரும் அலறினர். ஒரு சிலர் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.

வேறு சிலரோ ஏதோ குண்டுவெடிப்பு என்று கருதி பீதியில் உறைந்தனர். மேலும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்துவிட்டனர் அவர்களின் விண்கலன் மூலம் தான் இப்படி சப்தம் வரும் என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். பெங்களூருவில் சரியாக பிற்பகல் 1.45 மணிக்கு Sarjapur, Whitefield, Electronic City, Marathalli, Indiranagara, Hebbal, J P Nagara and K R Puram ஆகிய பகுதிகளில் இந்த சப்தம் உணரப்பட்டது.

அதாவது பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை சுமார் 54 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த பெருவெடிப்பு சப்தம் கேட்டுள்ளது. இது குறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தங்கள் விமான நிலையத்தில் இருந்து சுகோய் 30 ரக விமானம் புறப்பட்ட போது எழுப்பிய சோனிக் பூம் தான் அந்த சப்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக சுகோய் போன்ற ஒலியை விட வேகமாக செல்லும் விமானங்கள் 90 டிகிரியில் மேலே எழும்பும் போது இப்படி சோனிக் பூம் எனப்படும் பெருவெடிப்பு சப்தம் கேட்கும் என்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் கூறியுள்ளது. அதே சமயம் சூப்பர் பூம் சப்தத்தை பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே உணர முடியும் என்று சிலர் கூறுகின்றனர்.


போர் விமானத்தின் சோனிக் பூம் சப்தம் 54 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் பெங்களூரு போலீசாரோ அதிகாரிகளோ இந்த சப்தம் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இதனால் பெங்களூருவுக்கு வந்தது வேற்றுகிரகவாசிகள் தான் என்று சிலர் கொளுத்திப்போட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப்பின் அமிர்தசரஸில் இதே போன்று சோனிக் பூம் சப்தம் கேட்டது தெரியவந்துள்ளது. அங்கும் விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட போதே இப்படி ஒரு சப்தம் கேட்டதை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தது.