குடிபோதையில் இருந்த மருமகனால் மாமியாருக்கு ஏற்பட்ட விபரீதம்! ஆண்டிப்பட்டி அதிர்ச்சி!

ஆண்டிபட்டி அருகில் குடும்ப பிரச்சனை காரணமாக மாமியாரை , மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள எரதிமக்காள்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீசன்(வயது 33). ஜெகதீசன் அதே பகுதியை சேர்ந்த குப்பம்மாள் என்பவரின் மகளை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெகதீசன் குடி போதைக்கு அடிமையானவர். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஜெகதீசன் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்ததால் அவரது மனைவி சண்டை போட்டு உள்ளார். சண்டையின் காரணமாக ஜெகதீசனின் மனைவி, கணவரிடம் கோபித்து கொண்டு தன் தாயான குப்பம்மாளின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இதனையடுத்து மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகதீசன் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் . அப்போது ஜெகதீசன் போதையில் இருந்துள்ளார். மனைவியை அழைத்த போது அவர் வர மறுத்ததால் தன்னிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து தன் மனைவியை தாக்க முயற்சித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த குப்பம்மாள் தன் மகளை காப்பாற்றுவதற்காக ஓடி வந்துள்ளார். அரிவாள் வெட்டை தடுக்க முயன்ற குப்பம்மாள் மீது ஆத்திரம் அடைந்த ஜெகதீசன் தன்னிடம் வைத்திருந்த அரிவாளை வைத்து தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குப்பம்மாள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து தகவலறிந்து வந்த கண்டமனூர் போலீசார் ஜெகதீசனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.