வெறும் 45 நாட்கள்..! தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்..! இயற்கை விவசாயியான கம்ப்யூட்டர் என்ஜினியர்..! எங்கு தெரியுமா?

ஊரடங்கு காலத்தில் 3 மாதங்களாக வீட்டில் முடங்கிய கணினி இன்ஜினியர் இயற்கை விவசாயத்தில் லாபமடைந்த செய்தியானது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பூவாலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மயிலாடுதுறையில் இயங்கி வந்த ஒரு கணினி ஹார்டுவேர் கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் தன்னுடைய வருமானத்தை ஈடு செய்வதற்காக இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி வீட்டின் பின்புறத்தில் 5000 சதுர அடி கத்தரிக்காய் சாகுபடி செய்ய முடிவெடுத்தார். கத்திரிக்காய் விதையை விதைத்து, இயற்கையான முறையில் விவசாயத்தை மேற்கொண்டார். 45 நாட்களில் கத்தரிக்காய் தற்போது மகசூல் ஈட்ட தொடங்கியுள்ளது. ரசாயண உரங்கள் எதையும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

தினமும் 25 கிலோ முதல் 30 கிலோ வரை கத்திரிக்காயை பறித்து விற்பனை செய்து வருகிறார். எந்தவித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாத காரணத்தினால், "ஆர்கானிக் கத்திரிக்காய்" என்று தன்னுடைய கத்திரிக்காயை விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால் சுற்றுவட்டார பகுதியில் இவருடைய தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய்க்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் வருமானம் இல்லாமல் தவித்து வந்த தியாகராஜனுக்கு தற்போது நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மீண்டும் வேலைக்கு சென்றாலும், தன்னுடைய சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஆரோக்கியமான காய்கறிகளை விற்பனை செய்வதை தொடரப்போவதாக சுற்றுவட்டாரத்தில் கூறியுள்ளார்.

இவருடைய முயற்சிக்கு அக்கம்பக்கத்தினர் பெரிதளவில் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.