SP வேலுமணிக்கு ஸ்கெட்ச்! அமித் ஷாவை அலற வைத்த IPS அதிகாரி! களம் இறக்கிய ஸ்டாலின்!

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாகவும் இருந்த எஸ்பி வேலுமணியை கைது செய்ய அமித் ஷாவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களம் இறக்கியுள்ளார்.


தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாக இருக்கும் இவர் மீது ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை திமுக தொடர்ந்து கூறி வந்தது. மாநகராட்சிகளக்கு லைட் வாங்கியது முதல் ப்ளீச்சிங் பவுடர் வாங்கியது வரை அனைத்திலும் எஸ்பி வேலுமணி ஊழல் செய்துள்ளதாக ஆளுநரை சந்தித்து திமுக புகார் கொடுத்தது.

இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கும் கூட உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே எஸ்பி வேலுமணிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஏன் கருத்து தெரிவித்த திமுகவினரை கூட கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் எஸ்பி வேலுமணி – திமுக இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியது. தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை சென்ற மு.க.ஸ்டாலின், எஸ்பி வேலுமணியை நிழல் முதலமைச்சர் என்றும் ஊழலின் உறைவிடம் என்றும் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வார்கள் என்றும் அவர்களில் எஸ்.பி.வேலுமணி தான் முதல் ஆளாக சிறைக்கு செல்வார் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் கூறியது போல் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. எனவே அவர் வாக்குறுதி அளித்தது போல் லஞ்ச புகாரில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்குவது போல் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய டிஜிபியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நியமித்துள்ளார் உள்துறை செயலாளர். அதன்படி இதுவரை காலியாக இருந்த இந்த பதவிக்கு பி கந்தசாமி எனும் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வேறு யாரும் இல்லை, சிபிஐயில் டிஐஜியாக பணியாற்றிய போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தவர். குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது சொராபுதின் ஷேக் என்கவுண்டர் வழக்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு.

இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் மிக முக்கியமானவராக இருந்தவர் கந்தசாமி. அப்போது அவர் சிபிஐயில் டிஐஜியாக இருந்தார். விசாரணைக்கு ஆஜராக வந்த அமித் ஷாவை, சிபிஐ அலுவலக வாசலில் வைத்தே கைது செய்து காரில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவர் இவர். இத்தனைக்கும் அப்போது குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது.

அமித் ஷாவை கைது செய்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்தே கந்தசாமி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். என்ன காரணத்திற்காக நான் கைது செய்யப்படுகிறேன் என்று அமித் ஷா கேட்ட போது, அதனை நீதிமன்றத்தில் கூறுவதாக தெரிவித்து தனது துணிச்சலை வெளிப்படுத்தியவர் கந்தசாமி.

இப்பேற்பட்ட ஒரு துணிச்சலான அதிகாரியை தான் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதாவது எஸ்பி வேலுமணி போன்ற அதிகாரமிக்க மற்றும் கட்சியில் பலம் பொருந்திய ஒரு நபரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு துணிச்சல் தேவை. ஏனென்றால் தமிழகத்தில் மட்டும் அல்ல எஸ்பி வேலுமணிக்கு டெல்லியிலும் தொடர்புகள் அதிகம். அவரது டெல்லி தொடர்புகள் நிச்சயமாக போலீசாரை அவர் அருகில் நெருங்க விடாது. எனவே அதனை எதிர்கொண்டு வேலுமணியை கைது செய்தே ஆக வேண்டும் என்பதற்காகவே கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் இயக்குனர் ஆக்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

எஸ்பி வேலுமணி மட்டும் அல்லாமல் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் திமுக தொடர்ந்து ஊழல் புகார்களை கூறி வந்தது. எனவே அவர்களையும் குறி வைத்தே கந்தசாமி ஐபிஎஸ் இந்த பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.