மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய் தந்தையுடன் பைக் பயணம்! கழுத்து அறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட 3 வயது குழந்தை! சென்னை திகுதிகு!
சென்னையில் கொண்டித்தோப்பு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதியினருக்கு அபிமன்யு என்ற 3 வயது குழந்தை உள்ளது.
3 பேரும் கொருக்குப்பேட்டையில் உள்ள தங்களுடைய உறவினர்களை காண்பதற்காக நேற்று சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இவர்கள் மாலை நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
கொருக்குப்பேட்டை மேம்பாலத்திற்கு அருகே வந்துகொண்டிருந்தபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா கயிறு அபிமன்யுவின் கழுத்தை பதம் பார்த்தது. அபிமன்யு நிலை தடுமாறி கீழே விழ அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகிலிருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு அபிமன்யுவை அழைத்து சென்றனர்.
அபிமன்யுவை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தங்கள் கண்முன்னே தங்கள் மகன் இறந்துபோனதை ஜீரணிக்க இயலாத பெற்றோர் கதறி அழுது கொண்டிருந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வடசென்னை பகுதிகளில் மாஞ்சா கயிற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக தமிழக அரசு காத்தாடி மற்றும் மாஞ்சா நூலிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவமானது கொண்டித்தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.