16 கரங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ நரசிம்மர்! முக்தி தரும் தரிசன மகிமை!

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று.


இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.

நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார்.


சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிகஉயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த க்ஷேத்திரம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த பக்தியும், மிகுந்த உடலுறுதியும் இருந்தால் மட்டுமே உயர்ந்த மலைப்பகுதியில், காட்டுக்குள் உள்ள இந்த க்ஷேத்திரத்துக்குச் சென்று நரசிம்மரை தரிசனம் செய்யமுடியும். ஆனால் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, சமதளமான-வேளாண்மைப்பகுதியான கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.

பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது. இச்சிறுவனின் தாத்தா காசியப்பர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காசியப்பரால் நரசிம்மரை தரிசனம் செய்ய இயலாமல் போயிற்று. ஆகவே தன் பேரன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம சொரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர்.

முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். நரசிம்மர் தரிசனம் காண்பீர்கள்!” என்பதே அசரீரி வாக்கு.

புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தார். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து தம் இதயக்கதவைத் திறந்தார் மகாவிஷ்ணு. அக்கணமே, ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் வடிவில் அவதார சொரூபியாகக் காட்சி கொடுத்தார்.


சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “பக்தப் பிரபுவே! தாங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்என்று வேண்டியதும்அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.

நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.

சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.

இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.

இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார். உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.