அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அகில இந்திய அளவில் சித்த மருத்துவ நிறுவனம் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக பாரதப் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறா.


அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ’ மத்திய அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின், அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முயற்சிக்கு நான் நன்றி தெரிவிப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும்.

சித்த மருத்துவத்தில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இதை அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் தமிழகத்தில்தான் சித்த மருத்துவம் தோன்றியது. பேருந்து மற்றும் ரயில் இணைப்புடன் நிறுவனம் அமைக்க தேவையான இடம் சென்னைக்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக சாதகமான முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.