தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை விடுவிக்க சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் செய்தி இதுதான். 2019ம் ஆண்டு கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால் படுகொலைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மணிவாசகம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ், தருமபுரி சித்தானந்தம் ஆகியோரைக் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


சனநாயக நாட்டில் ஒருவரது இறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்கான உரிமையையே மறுத்து, அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமைகளாக வரையறுத்து வழங்கியுள்ளவற்றிற்கே எதிராக, இறுதி நிகழ்வில் பங்கேற்றதற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளை ஊபா எனும் ஆட்தூக்கிச் சட்டத்தில் கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

2019ம் ஆண்டுப் பதியப்பட்ட வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது திடீரென காவல்துறை கைது செய்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ‘தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவைத் தோற்கடிப்போம்’ எனும் முழக்கத்தை முன்வைத்து, கடந்த சனவரி 20 ஆம் தேதி தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த கூட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே,

இக்கைது நிகழ்வு நடைபெற்றுள்ளதால் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் மீதுகூட வழக்குப்பதிவு செய்து சிறைப்படுத்துவது என்பது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலாகும். மக்கள் உரிமைக்காகப் போராடும் சனநாயக அமைப்புகளை இத்தகைய பொய்வழக்குகள் மூலம் அச்சுறுத்தி முடக்குவது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.